Thursday, March 7, 2013

பெண்மையே...


தாயாய்த் தங்கையாய்
தோழியாய் துணைவியாய்
மகளாய் மதிப்பாய்
மருமையிலும் துணையாய்
வருபவளே !

நதியாய்ப் பெருக்கெடுத்து
நானிலம் செழிக்கவைத்து
நன்றி கெட்ட மானிடர்
நலம் பேணச்
செய்பவளே !

ஆதியாய் சோதியாய்
அகிலம் முழுதுமாய்
ஆதர வளித்தாங்கே !
நிதர்ச னமாய்த்
திகழ்பவளே !

பெண்மையே அம்மையே
பேரின்பமே பேரருளே
உற்ற தாய் உன்னையே
உண்மையில் வணங்கிடில்
உலகினில் உயர்வாரே
உத்தமராய்.

ஊழல் . . . .


ஊழல் ஊழல் ஊழலென்றே
ஊர்முழுக்கப் பேசுவார் !
ஊழலென்ற தோர் விலையை
ஊதிக் கொடுத்தே வாழுவார் !

ஊழ்வினை தனை மறந்து
ஊளச் சதை வளர்க்க
ஊழல் ஒன்றே உரிமையென்று
ஊக்கத்தோடுச் சாற்றுவார் !

ஊழல் இன்று ஊரிப்போய்
ஊணாகவே மாறியதால் - ஊழல்
எங்கு இல்லை எதனில் இல்லை - என்றே
உரிமைகள் நிலை நாட்டுவார் !

ஊழல் கொடுப்பவனும்
உகந்தே பெருபவனும்
ஊழின் வினையாலே
உண்மை நிலை அறியார்.

சிவன் சொத்து குல நாசம்
என்ப தனைப் போலவே
மக்கள் சொத்துக்களை
மாற்றிப் பெருத லாகுமோ !

ஊழல் மூலம் வளர்ந்திட்ட
ஊளச் சதை அனைத்துமே
ஊறும் கரையான் புற்றுபோல்
கரையும்போ தென்ன செய்வதோ ?

விளை யாட்டாய்ச் சிலர் வாங்குவர்
வினை களாகவேச் சிலர் வாங்குவர்
விலை பேசியேச் சிலரும் வாங்கியே !
விலை மாதுக் கொப்பாய் வாழ்வர்.

Wednesday, March 6, 2013

நீ எங்கே ?


பகலவன் பல் தேய்த்து
பரிமளித்த வேளைதனில்
பசும் புல் நுனிமேல்
படர்ந் திருந்த பனித் துளியே !

நீ எங்கே ?

கண்டும் காணாதுச் சென்றாயோ !
கதிரவன் கண்பட்டு மறைந்தாயோ !
எங் குன்னைத் தேடினாலும்
அங்குன்னைக் காணவில்லை !
எளியவனின் இளம்மனது
என்னாகும் தெரியிலியோ !

நானா !

இளம்பெண் முகத்திலே !
இளம் பிறை நெற்றியிலே.
வியற்வை முத்துக்களாய்
விளைந்திருக்கேன் தெரியலையா ?

Monday, March 4, 2013

ஈழத்து எந் தமிழன்.


பலர் மானம் காத்த எந்தமிழன்
தன் மானமிழந்து நிற்கிறான்
வானமே காவலாக
வசைகள் பலவும் ஏற்கிறான்

கடல் கடந்து வணிகம் செய்து
காற்பதித்த பெருமை போக
கண்கள் முன்னே கால் நடை போல்
கவணிப்பின்றித் திரிகிறான்

உலகெலாம் ஆண்ட தமிழன்
உறைவிடமின்றி கிடக்கிறான்
உன்னத புவியில் கால்பதிக்க
உரிமை இன்றித் தவிக்கிறான்

காலமே புவிக் கோளமாக
மாறிநின்ற போதிலும்
சத்தியத்தின் சக்தி மட்டும்
சாட்சி சொல்ல வேண்டுமே

சரித்திரம் ஒருநாள் கூறும்
இந்த காட்சிகள் யாவும் மாறும்
உலகை ஆண்ட உன்னத தமிழன்
மீண்டு எழுவான் ஆட்சி புரிவான்.

Sunday, March 3, 2013

எதை நோக்கிப் பயணிக்கிறது இளைய தலைமுறை ?


நல்ல தலைமை இல்லா
வெற்றிடம்
நற் பண்புகள் குறைந்திடக்
காரணம்
சுவ ரொட்டிகள் ஒட்டிப்
பிழைத்திடும்
சுய நலமாய் அவை
சிரித்திடும்
எதையும் செய்திடத்
துணிந்திடும்
எவர்க்கும் அஞ்சிட
மறுத்திடும்
இளைய தலைமுறை
எதிர்காலப் பயணம்
என்ன வாகும் ?
என்றே கலங்கும்
காலமிது !

எதிர்காலக் கனவிலே
மிதக் கிறான்
நிகழ்காலம் இழந்து-பின்
துடிக் கிறான்
தாயகத் தற் புகழ்ச்சி
பேசிப் பேசி
தரணி முழுமையும்
பயணி க்கிறான்.

இளமையில் வாழ்வினைத்
தொலைக் கிறான் -தினச்
செய்தி களுக்காய்த் தோள்
கொடுக் கிறான்
சித்தம் தெளிந்து வாழ்வதை
விடுத்து – தினம்
செத்துச் செத்தே பிழைக்கிறான்

நடிகர்கள் போலவே
நடிக்கிறான்
நல்ல நாடக மிதனையே
ஏற்கிறான்
தன் வாழ்க்கையின் பாதி
நாட்களையே
நாடக மாக்கி கழிக்கிறான்

உற்றார் பெற்றோர்
உறவுகளை
உதறித் தள்ளியே
நிற்கிறான் !
சுயநலத்தின் சுகத்திற்க்காய்
சுய மாய்ச் சிந்திக்கிறான் !
உறவுகள் இல்லா
இழி நிலைக்கு
தன்னை தாழ்த்திக்
கொண்டே இருக்கிறான்.

எதனையும் ஏற்கவே
மறுக்கிறான்
இதயம் இல்லாதவர் போல்
இருக்கிறான்
இதயம் தொலைத்த இரும்பு
மனிதனாய்
தினம் தன்னை தொலைத்தே
அலைகிறான்

கொள்கையில்லா
மாந்தர்கள் கூடே
கூட்டமாய்க் கொக்கறிக்கிறான்
கொள்கை வகுத்து
நிற்பது விடுத்து
அடுத்தவர்க்கு தோள்
கொடுக்கிறான்.

இவ்வா றெல்லாம் கதைக்கின்றார்
பொருப்பில்லா சிலரோ
நகைக்கின்றார்
ஏதும் அறியாச்
சிறுவர்கள் போலே
இளையவரைக் குறை
சொல்லியே பொழுதினைக்
கழிக் கின்றார்.

ஏதேதோ சொல்கின்றார் !
இளையவர் சொல்வதைக்
கேட்க மறுக்கின்றார் !
எல்லைகள் விரிந்த
இளையவர் நோக்கம்
புரிந்தும் புரியாது
இருக்கின்றார் !

தலைமுறை தாண்டிய நோக்கமிது
தலைமுறை தலைமுறை
தாண்டி நிற்குமிது
தன்னலம் மறந்து
தாயகம் காக்கும்
தரணி போற்றும்
பயணமிது !

எல்லைகள் முழுதும்
காக்கின்றான்
தம் எல்லைக்குள்ளே
நிற்கின்றான்
இளமை முழுதும்
காவலில் தொலைத்தே
இயற்கையோடு இணைகின்றான்.

உலகம் முழுதும் கைவலைக்குள்
என்றே தினமும்
எண்ணி எண்ணி
திரைகடல் சுறுக்கி
திரவியம் வளர்த்த
இளையவர் மாண்பு
புரிந்திடுமோ ?

இந்திய நாணயம்
அதுக்கோர் குறியீடு
வேண்டு மென்றே
நம் மினத்து
இளைஞர் முயற்சி
மிக்கதால் இக் குறியீடாம்
எவரும் இதனை மறுப்பரோ ?
எழும்பில்லா நாக்கினைச்
சுழற்றிக் கதைப்பரோ ?

யா வர்க்குமாய் இவன்
உழைக்கிறான்
யதார்த்த உலகிலே
பய ணிக்கிறான்
சுயக் கட்டுப் பாடுகள்
கொண்டே சுயம்புவாய்
எழுந்தே நிற்கிறான்.

சிந்தை சிதறா இளைஞனிவன்
தன் சிந்தனைத் துளிகளை
விதைத்தவன்
கண்ணீர்த் துளி தேசத்
தமிழருக்காய்
தனதுயிரையும் துச்சமாய்
கொடுத்தவன்.

மந்தைகள் போலே
வாழ்ந்த மனிதரை
தம்மினத் தமிழருக்காய்
சிந்திக்க
வைத்திட்ட இளைஞ னிவன்
நம்மில்
ஒற்றுமை உணர
வைத்திட்டான் உலகத் தமிழர்
ஒற்று மைக்காய்
உயிர் துறந்திட்டான்.

உலகம் முழுதும்
வாழும் தமிழர் - ஒன்றே !
என்று லகோர்க்கு
உணர்த் திட்டான்
நாளைய விடியல்
நம தென்றே
உணர்ந் திடவும்
வழி வகுத்திட்டான்.

சமுகப் பொருப்பினை
ஏற்கிறான் - இவன்
சமுதாயத் துயர் துடைக்கிறான்
ஏற்றத் தாழ்வு இல்லா
நிலை தனை எடுத்தே
இயம்பி இருக்கிறான் .

சாதி மறுப்புத் திருமணங்கள்
சார்ந்தே இவனிருக்கிறான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றே உணர்த்திட வைக்கிறான்.
உறவுகள் விட்டு
தனிமைகள் தொட்டு
உற்றம் சுற்றம்
நட்பும் விட்டு
உறவுக்காய் பயணிக்கிறான்

தம் உறவுகள்
மேம்பட உழைக்கிறான்.
உற்றார் பெற்றோர்
உறவுகள் போற்ற
உரிமைகள் பலவும்
இழக்கிறான்
உன்னத உறவுகள்
உயர்ந்து நிற்க - தானேத்
தனிமையை ஏற்கிறான்.

தமிழர்கின்னல் விழைந்திடும்
நிலைதனில் தாமாய்
முன் நிற்கிறான்.
இளைஞர் ஒருவர்
முயற்சி இல்லையேல்
என்ன வாகும் இவ் வுலகம்
எண்ணிப் பார்த்தால்
உண்மைகள் புரியும்.

நல்லன நோக்கி
நல்லன நோக்கி
நற் சிந்தனைகள்
அதனையும் நோக்கி
நாடு முன்னேற்ற
மதனையும் நோக்கி - நல்ல
பண் பாடுகளையும் நோக்கி
வரலாற்றுச் சுவடுகள் நோக்கி
வலிமையான பாரதம் நோக்கி
முன்னோடித் தமிழ்
மொழி நோக்கி
முயற்சி யோடு
முதன்மைகள் நோக்கி
தலைமுறை கடந்து
சிந்திக்கிறான்
தன் தலைமுறைக்காய்
பயணிக்கிறான்.

வியர்வைச் சரித்திரம் !


தங்கள் கண்களில்
ததும்பி
தங்களின் மனங்களில்
தவழும் இது
வெற்றுச்சரித்திரம்
அல்ல ;
தமிழனின்
வியர்வைச் சரித்திரம் !

காலங்காலமாக
இத் தீவுதனில்
பேசப்பட்ட
தமிழர் வரலாறும்
தமிழர் இத்தீவுகளின்
தளரா வளர்ச்சிப்பணிக்காய்த்
தமை ஈந்துழைத்த
சரித்திரத்தையும்,
தமிழர்தம் உரிமைக்கும்
உடமைக்கும் நடத்திட்ட
போராட்டங்களையும்
வளரும்
தலைமுறை
அறியச் செய்வதே
நோக்கம்
இது மட்டுமல்ல வரலாறு
தீவு முழுமையும்
பதிந்திட்ட வரலாற்றுச்
சுவடுகளின் முன்னுரையே !

நம்
சந்ததிகள்
அறிந்து கொள்ள
சரித்திரப் பாதையின்
வழி காட்டியாய்த்
தொடர்கிறது .. . . . . .
வியர்வைச் சரித்திரம் !

அந்தமான் தீவுகள்
ஆதி மனிதனின்
மீதிக்கதை சொல்லும்
அதிசய தேசம் !

அதிகார வர்க்கத்தின்
ஆதிக்க வெறியர்
அலைக்கழித்த  தேசம் !

ஆங்கிலேய ஜப்பானிய
ஆட்சி அடக்கு முறையில்
அவதியுற்ற தேசம் !

விடுதலைக்கு வித்திட்ட
வீர மறவர்தம் வேட்கைக் கனவுகள்
வெகுவாக விளைந்த தேசம் !

வங்கத்துச் சிங்கம் வீறு
நடைகொண்டுகால்
பதித்த தேசம் !

சுதந்திரத்தின் சுவையை
சுடரேந்தி முதன்முதலாய்ச்
சுவாசித்த தேசம் !

சுதந்திர பூமியில் முதல் தமிழர் திரு லோக நாதனைக்
கவர்னர் ஜெனரலாய்க்
கண்ட தேசம் !
உறவுகள் மறந்து
உணர்வுகளால் உதித்த
உன்னத தேசம் !
இது தண்ணீர் தேசமல்ல
தமிழனின் சரித்திரம் பேசும்
கண்ணீர் தேசம்…

இந்த தேசம்
மக்கள்வாழத் தகுதியற்ற
மலைப்பிர தேசம்.
மலைகளைப் போல நோய்கள்சூழ்
வியத்தகு தேசம்.
இவையெலாம்,
ஆங்கிலேய ஆட்சியதில்
சொல்லி வைத்தகூற்று.

ஆகவே ,
ஆதியிலே திறந்த வெளிச் சிறைச்சாலைகளாய்
இருத்திடவே பணித்தான் !
லார்டு மேயோ - தலை
அறுத்திடவே சிறைச்சாலை தனைப்
படைத்திட  நினைத்தான்  !

வேறெங்கும் நிகழ்ந்திராத
கொடுமையிலும் கொடுமை !
கொடுங்கோலர்கள்
ஆட்சியில் அமைந்த
கூண்டுச்சிறை மகிமை !
சிறகடித்துப் பறக்க
நினைத்த அவர்தம்
சிறகொடித்து அடைக்க
அமைந்திட்ட
சிலந்திச்சிறை !

தன்னல மின்றித்
தாயகத் தினைப் போற்றி யவர்கள்
தனக்குத் தானே
கட்டிக் கொண்ட தனிமைச்சிறை !

வீர சவார்கர்
உள்ளிட்ட
விடுதலை வேங்கைகளை
உள்ளிருத்தி
வேட்கை கொண்ட
வேள்விச்சிறை !

வெள்ளையரை
நடுங்க வைக்க வெற்றிநடை
போட்டுவந்த வீரமிகு
சுபாஷ் பாதம் பட்ட
புண்ணியச்சிறை !

இன்று
சரித்திரக் கதை
கூறி மனிதமனச்
சாட்சிகளாய்த்
திகழும்
செல்லுலார்ச்சிறை !
அந்நிய
ஆட்சியது அகன்றிடவே
அமைதிநிலை கொண்டிடவே
சுதந்திர பாரதத்தின்
சுதந்திரப் பிரஜைகளாய்

தமிழன் !
இத்தீவு களில் - கால்
பதித்திட  விழைந்தான் - காலச்
சுவடுகளாய்ப் பதிந்தான்.

பன்னாட்டி லிருந்து
புலம்பெயர்ந்தான்,
தன் நாட்டில் வந்து
குடியமர்ந்தான்.

குடியமர்ந்த தீவதனை
செழுமை யாக்கிடவே உழைத்தான்;
தனையீந்து வரலாறு
தனையே படைத்தான்.

தமிழன் !
தாயகத்தை நோக்கி நோக்கி
தன்நிலை மறந்தான்.
இயன்றவரை உழைத்துவிட்டு
இயற்கையோடு இயைந்தான்.

ஒற்றுமையாய் இருந்தான்
அனைவரோடும்
உரிமையோடு கலந்தான்.
சாதி சமய பிணக்கின்றி
சமதர்ம சுடரேந்தி
தமிழனாக வாழ்ந்தான்.
தனிப்பெரும் பான்மையோடும்
திகழ்ந்தான் !

மனித சேவையில்
மகத்தான பணிகளாற்றிட
காலணி யாதிக்கத்தில்
குடியமர்த்தப் பட்டவர்தம்
வாழ்வியல் வசதிக்காய்
வாணிபம் செய்திட

சுதந்திர நாட்டில்
வளர்ச்சிப் பணிகளுக்காய்
அரசு விளம்பர
ஆணைக் கேற்ப
அரசு ஊழியராய்

பொதுப்பணி, வனத்துறையில்
பாட்டாளி வர்க்கமாய்த்
தன்னை உருக்கிச்
சாலைகள் அமைத்தான் ;
தன்நிலை மறந்து
சாக்கடை அகற்றினான் !
மனிதக் கழிவுகளை
மனதொப்பி கைகளில் தூக்கினான்.

தூய்மையே உருவமாய்
துப்புறவுப் பணியாளனாய்
புதர்மறைவுக் காவலனாய்
உள்ளத்தோடு ஈடுபட்டான்
ஊர்சிறக்கப் பாடுபட்டான்.

உடல் உருக உயிர் உருக
உழைத்தான்.
ஊதியத்தின் அளவு
உழைப்புக்கு ஏற்றதாய் இல்லை.
ஊதிய உயர்வுக்காய்
நிர்வாகத்தோடும்
பேசினான்.

அவர் செய்வார்
இவர் தருவார் எனக்
கண்போன திசையெங்கும்
பார்த்ததுதான் மிச்சம் !
நடத்துவாரில்லை.

பின்னர்,
நிலைமை தனைஉற்று
நோக்கினான்.
நிர்வாகம் பேச
மறுத்திடவே
ஊதிய உயர்வினைக்
கொடுக்க
மறுத்திடவே

தொழிலா ளர்களை
ஒன்றாய்க் கூட்டினான்,
ஒருமித்த கருத்தை
வலியுறுத்திப்
பேசினான்.

வரலாற்றில் முதலாய்
பொதுப் பணித்துறை
வேலை நிறுத்தம் !
ஊழியர் கூடி ஒன்றாய்
உயர்த்திய
போராட்டம் !

பொதுவேலை நிறுத்தம்
போராட்டமாய்
வெடிக்க,
நிர்வாகம்
வந்ததைத் தடுக்க,

ஆயிரத்து தொள்ளாயிரத்து
அறுபத்து மூன்றினிலே
நடந்ததோர் கொடுமை !
தமிழர் வாழ்வில் என்றும்
நெஞ்சைவிட்டு
கிஞ்சிற்றும் அகலாத நாள் !
மக்கள் எதிர்ப்புச் சக்தியினைக்
கண்டு
மனிதாபி மானமற்று
வெறிப்பிடித்த
வேங்கைகளாய்
ஊழியர்கள்
மீதாங்கே
துப்பாக்கிச்சூடு.

தொழிலாளர்களின்
உரிமைக்காய்
உன்னதமாய்ப் போராடி
சேவுகன், சண்முகம், பெருமாள்
பொதுப் பணித்துறை ஊழியர்கள்
எழுச்சித் தமிழர் மூவரும்
வீர மரணம் தழுவி !
தொழிலாளர்
உரிமை தனை
நிலை நாட்டினர்.
பல தொழிற் சங்கங்கள்
உருவாக
விதையாகினர்.

இத் தீவு வரலாற்றில்
இதுவே
முதற்போ ராட்டம் !

தமிழன்
தனை ஈந்து
தற்குறிகளைக் கலைந்து
பொதுவாழ் விற்காய்
முன் நின்று நடத்திய
முதற்போ ராட்டம் !
எந்தமிழன்  துயர்துடைக்க
எழுச்சியோடு எழுந்தான்,
உரிமைகளைப் பெறுவதற்காய்
உணர்வோடுக் கரைந்தான்,
உணர்வு பொங்கிட
உன்னதமாய்த் - தனது
உயிரையும் துறந்தான்.

இப் போராட்டக்
கதையை தீவுக ளெங்கும்
கூறும்
தமிழன் தனை ஈந்த சரித்திரமித்
தரணி வாழ் தமிழரையேச்
சாரும்.

போராட்டக் குணம்
கொண்டவன்
தமிழன் !
இத் தீ வுகளில்
போராடியே
உரிமைகளை ஊட்டியவன்- பிறர்
போற்ற வாழ்ந்து - தம்
பெருமை தனை நிலை
நாட்டியவன்.

இத் தீவு
வாழ்த் தமிழர்
வாழ்வில்
இதுவே முதற்படி
இதற்குப்பின்
அடிப்படைத் தேவைக்கும்
அளப்பறிய உரிமைக்கும்
தேவைப் பட்டது - பல
போராட்டம்.
ஒவ்வொரு நிலையிலும்
போராட்டம்.
உன்னத நிலை எய்திடப்
போராட்டம்.

பாமரனாய்ப் பலகாலம்
இருந்தது போதும்
தம் மக்களாவது இனி
கல்விபெற்றிட வேண்டும்
என்றுணர்ந்த தமிழன்,
தமிழர் வாசகர் சாலையதில்
ஒன்றிணைந்தான்
தமிழ் வழிக் கல்வி
தனைவுணர்ந்தான்.

பெருவாரியாய் இணைந்த
தமிழர்தன்
வருங்கால சந்ததிகள்
வளர்ந்திடவே
தரமுயர
தமிழ் வழிக் கல்வி
பெற்றிட,

தமிழினத் தலைவர்கள்
பலர் அடிகோல்
இட்டிடவே
அந்தமான் தமிழர் சங்கமதில்
துவங்கியது
தமிழ்வழிக் கல்வியுமே !

தமிழர்
கலாச்சாரப் பண்பாடு
வளர்ந்திடவே
கலைஇலக்கியப்
பயன்பாடு கூடிடவே
கல்மலையாய்த்
திகழ்ந்த இடமதை
நிர்வாகம் ஒதுக்கித்
தர !

கிடைத்திட்ட இடமது
பயனுற
தமிழர் பலர்
அயராது உழைத்தனர்
பெருவாரியாய்
பொதுப்பணி யாளர் பலர்
தம்பணி நேரம் போக
முழுஇரவுப் பொழுதினையும்
மேருபோல் உயர்ந்தெழுந்த
கல்மலையைக்
குடைந்தே அகற்றிச்
சமதள மாக்கினர் !
அக்கா லத்தில் வாழ்ந்திட்ட
பெருவணிகர் பலர் சேர
பொருளாதார.
உதவிகளும் செய்திட
அரசாங்கத் தமிழதி காரிகளும்
முன்வந்து இயன்றபல
உதவிகளை நல்கினர் !

அகில வுல கெங்கிலும்
தமிழ்ச்சங்கம் படைத்திட்ட
தமிழனிவன்
இத் தீ வுதனில்
தமிழர் நலனுக்காய்
படைத்திட்டான்
தமிழர் சங்கமதை.

தமிழர் ஒன்றென்று
உலகத்தோர் அறிந்திடவும்
அடுக்கடுக்காய் தமிழருக்கு
வந்திட்ட
தொல்லைகள் அறுபடவும்
துவங்கிய சங்கமிது !
அறுபது ஆண்டுகளைக்
கடந்து
அறவழியில் துணைநின்று
தமிழர் வாழ்வு தலைசிறக்க
தற்பொழுதும் சிரமேற் கொண்டு
தளராப்பணி
ஆற்றிடுதே ! தமிழருக்காய்.
சங்கமதில் நடைபெற்ற துவக்க
நிலை பள்ளிக்கல்வி
ஐந்தாவது வகுப்பு வரை
தொடர்ந் திடவே
அதற்கு மேல் தொடர
வசதி இன்மை யினால்
மீண்டும் தமிழர்பலர்
ஒன்றிணைந்து
இவர்களோடு தலைவர்பலர்
ஓன்றுகூடி
அன்றைய நிர்வாக மதை
அணுகினர் !
தமிழ் மொழி
கல்விக்காய் மாற்று இடம்
கோரினர் !

தமிழரின் கோரிக் கையினை
ஏற்றக் கல்வி இயக்குநரும்
தாமே சங்கமதில்
முன்வந்து
முறையாகக் கருத்தாய்ந்து
சென்றார் !

தீவுதனில்முதல்த்
தமிழ்வழிக் கல்விக்காக
தமிழ்பள்ளி தனைநிறுவ
அருதுப் பகுதியினில்
அரசு நிர்வாகம்
இடம் ஒதுக்கி முதல் முதலாய்த்
தமிழ்க் கல்விதனை நல்கி
தமிழ்மா ணாக்கர்வாழ் வதனில்
ஒளியேற்றிட வழிவகை
செய்திட்டார் !

அருதுப் பகுதியில்
ஆரம்பித்த தமிழ் கல்விபோல்
பல்வேறு பகுதிமக்கள்
பயன்பாடு கொண்டிட
தமிழ் இலக்கிய மன்றத்தினர்
கோரிக்கை !

‘தமிழ் படிக்க
குறைந்தது 35
குழந்தைகளைக் காட்டுங்கள்…
தமிழ்வகுப்பு தொடங்க
முயற்சிப்போம்’
இது கல்வித் துறை !

தமிழ் இலக்கிய
மன்றத் தூண்களாக
விளங்கிய திருவாளர்கள்
சுப. சுப்பிரமணியனார், வீ.வீரையா, சண்முகம்,
து.க.கோபால், கதிர்மாணிக்கம், ஆறு.மாணிக்கம்
காஜா முகைதீன், குமரப்பன்
பாலு, சாமியா சேர்வை
பெரியசாமி, சுவாமிநாதன்
தி.மு.சீனிவாசன் இவர்களுடன்
சக்திவேல் !
நல்ல உள்ளம் கொண்டோர்
தமிழர் இல்லந்தோறும் சென்று
கதவைத் தட்டினர்
தமிழ் மாணாக்கர்களை
அரவணைத்தனர்
நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினர்.

அத்தகைய முயற்சியில்
ஆரம்பித்தது
போர்ட்பிளேயர் அபர்தீன்
பகுதியில் முதல்
தொடக்க நிலைப்பள்ளி !
மங்குல்டான், சைத்தான் காரி,
விம்பர்லி கஞ்ச், பம்புபிளாட் என
தென் அந்தமான்
தமிழர் எங்களுக்கும்
தமிழ்ப்பள்ளி என
கல்விக் கொடைக்கு
கையேந்திய காலங்கள்
இன்றும்
பசுமைமாறா நினைவுக்
கோலங்கள்.

இம்முயற்சியே
பின்னால் தமிழ் வழிக் கல்வி
தீவுகள் தோறும் திறக்கப்பட
காரணமாய் அமைந்தது !

இலக்கிய மன்றத்தோடு
அரசியல் கட்சிகள்
அனைத்தும்
விடுதலை பெற்ற நாட்டில்
கல்விக் குரல்
தந்தனர்.

இத் தீ வதனில் பிறந்த
தமிழர்பலர் - இன்று
எத்திறமை வாய்ந்தவராய்
எத் துறையில் இருந்திடினும்
அப்பள்ளியின் பெருமை
அறிந்திருப்பர்
அல்லது
அப்பள்ளியில் கல்வி
பயின்றிருப்பர்.

அவ்வழியே அடியேனும்
கல்வி பெற்றேன்
அத்தளத்தில் தமிழர் பயனுற
தமிழறிவும் உற்றேன்.

இத்தீவதனில்
எழுதப்படாத அடிமைச் சாசனம்
அகற்றிட இயன்றளவு
அடியேனும் பங்கெடுத்தேன்.

தாயகத்தின் ஆணி வேராய் வந்த
தமிழ் கல்வி யாளர் பலர்
தங்கள் தகுதியோடு
பணியில் அமர
தமிழ்ப்பள்ளி அடித்தளமாய்  அமைந்ததுவே !

தமிழர் பலரும்
ஆசிரியப் பணியாற் றிடவே
தமிழரோடு
நற்பரி மாணம் பல
ஏற்றிடவே
தமிழ்ப்பள்ளி வாழ்வுநிலை
உயர்வெண்ணி
தமிழ் மாணாக்கர் எதிர்காலத்தை
எண்ணி எண்ணி
இராப்பகலாய்
அயரா துழைத்தனர் !
என்றென்றும்
தமிழர் மனதில்
நீங்காத இடத்தினைப்
பெற்றனர்.

உழைத்து முன்னே றியவன்
தமிழன் ;
அனைவருக்கும் உதவிக்கர மாயிருந்தவன்
தமிழன் ;
ஒற்றுமையே உயர் வெனக்கருதியவன்
தமிழன் !
ஒற்றுமையாய் உயர்வுகள்
பல கண்டிட
உள்ளூர் வாசிகள் பலர்
உள்ளூரக் குமுறினர் !

தமிழர் வளர்ச்சிதனை
தாங்காது இத் தீ வதனில்
தமிழருக்குத் தாங்கொனாத்
துயரங்களை அளித்தனர் !

தனியொருவனாய்த் தமிழரைக்
கண்டு விட்டால் அவரை
இகழ்ந்து பேசி
இன்னல்பல தந்தனர் !
பொறுத்துப் பொறுத்து
பொறுமை இழந்த
தமிழனவன் ஒன்றாய்க்கூடி
எதிர்த்தடிக்கத்  துணிந்தவுடன்
போராட்டமே வாழ்க்கையாய்
போராட்டக் களமேச் சூழ்நிலையாய்
மாறிப்போன பின்பும் கூட
ஒற்றுமையே உயர்வெனக்
கருதியவன்.

தம் குலத்திற்கேற்பட்ட
இன்னல்கள் களைந்திடவும்
தமிழர் தலை உயர்த்தி நின்றிடவும்
தரணி முழுதும் தமிழர்
பெருமை காத்திடவும்
போராடிப்போராடி
பொறுப்பாய் பலசெயல்கள்
ஆற்றினர் !
தமிழர்பட்ட
துயரங்களைத் தரணிவிட்டே
ஓட்டினர் !

வாழ்வதற்காய் போராடிய
தமிழனிவன்
வாழ்வில் போராடி
வெற்றிபல கண்டிட்டவன்
தனக்கெதிராய் இருந்த
சமூகத்தினை அரவணைத்து
தன்சமூ கத்தினை முன்னேற்றிச்
சென்றிட்டவன்.

தமிழ்க்கல்வி அமைந்ததுமே
தமிழர்பலர்
உற்சாக உத்வேகம்
கொண்டனர் !
தம் மக்களைத்
தமிழ் வழிக் கல்விகற்கச்
செய்தனர் !

தமிழ் வழிக் கல்வி கற்க
நிர்வாகம்
கட்டடம்கட்டியது
ஆனால்
பள்ளியில் குடி தண்ணீர்
வைத்திடத் தவறியது
தமிழ்ப் பள்ளி மாணவர்கள்
தண்ணீர் அருந்திட அருகினில்
இருந்த
இந்திவழிக் கல்வி
பயிற்றுவிக்கும் பள்ளிக்கே
சென்றுநீர் அருந்திவர

ஆரம்ப காலமதில்
சிறுசிறு இடைஞ்சல்கள்
அங்குள்ள மாணவர்கள்
செய்திடினும்
மாணவர்தம் மாண்புதனை
கருத்தில் கொண்டு
தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
விபரீதம் நிகழ்ந்திடாது
காத்தனர் !

எல்லாச்செயலும் மிஞ்சும்
வண்ணம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எழுபத்து எட்டு திசம்பர்த்
திங்களிலே
நீர் அருந்தச் சென்றமா ணவியரை
கேலி கிண்டல்
செய்திடவே !
இதனைப் பொறுக்க முடியாத்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
கூடிப் போய்த்
தவறதனை தட்டிக் கேட்டிட
இந்தி வழி மாணவர்கள்
தரக்குறைவாய் பேசியும்
அங்கிருந்த கற்களை வீசியும்
தாக்கினர்.

அக்கல் வீச்சில் குமாரென்றத்
தமிழ்பள்ளி
மாணவனின் ஒரு கண்
பார்வை பறிபோனதுமே!

இச்செயலைக் கண்டித்து
அன்றைய மாணவர்
திரு ஆமோஸ்
அவரது தலைமையிலே
தமிழ்ப் பள்ளி மாணவர்கள்
ஒன்றாய்க்கூடி போராடினர் !
போராட்டம் போர்க்களமாய்
மாறியது !

போராட்டத்தினை
திசை திருப்பிய உள்ளூர்
வாசிகள்                                                                                  
இனக் கலவரமாய்
இதனை யாக்கிடவே
தமிழ் பள்ளி மாணாக் கருக்காய்
தமிழர் அனைவரும் திரண்டு
வரலாறு காணா மிகப்
பெரிய போராட்டமாய்
உருவாகியது !

பல்வேறு  போராட்டத் திற்குப் பிறகு
நிர்வாகத்
தலையீட்டால் போராட்டம் முடிவு
காணப்பட்டது
தமிழ் பள்ளியில் தண்ணீர் தொட்டி
நிறுவப்பட்டது.

இப் போராட்டம்
தமிழர் ஒன்று கூட
வழிவகுத்தது
தமிழ் வழிக் கல்வி தொடர
வழிகொடுத்தது.

தமிழ்ப் பள்ளிகளைப்
பாதுகாக்க
தீவு முழுதும் தமிழ்ப் பள்ளிகளை
நிறுவிட,
ஓர்இயக்கம் தேவைப்பட்டது
இந் நிகழ்ச்சி மூலம்
தமிழ்க் கல்வி பாதுகாப்பு குழுஒன்று
தொடங்கப்பட்டது.

தமிழ்ப்பள்ளி தீவு முழுதும்
துவங்க வேண்டும்
தமிழ் வழிக் கல்வி பாது
காக்கப்பட வேண்டும்
என்பதற்காய் துவங்கப் பட்ட
இயக்கமது
தமிழுக்காய் பல தலைவர்
ஒன்றிணைந்த காலமது

தீவுமுழுதும்
தமிழ்க் கல்வி துவங்கப்
படாதுபோனால்
தீக்குளிக்கவும்
தயங்க மாட்டேன் - எனத்
தமிழ்த்திரு க.கந்தசாமி
அவர் அறைகூவல் விடுக்க
தமிழ்த்தேசியவாதி
அமரர் சுப.சுப்பிரமணியனாரும்
அவருடனிருக்க
பல தமிழ்த் தலைவர்கள்

இவர்களோடு சேர்ந்து
குரல் கொடுக்க
நிர்வாகம் பணிந்தது
தமிழ்ப் பள்ளி தீவுகளெங்கும்
துவங்கியது.

இப்போராட்டத்திலே
அமைந்தது தான் மோகன்புரா
அரசு மேல் நிலைப்பள்ளி
நிர்வாகம் இடம் ஒதுக்கிய
பல ஆண்டுகள் கழித்தும்
பள்ளிக்கட்டடம் கட்டப்படவில்லை
தமிழ் பள்ளிக்கோர் இடமென்றே
எண்ணி பலர் இருந்திட - அதனை
வேறோர் பள்ளிக்கு மாற்றிட
நினைத்தனர் ! - அதற்குப் பல்வேறு
காரணங்களைச் சுட்டிக் காட்டினர்!

அன்றைய பாரதப் பிரதமரின்
வருகையினை யொட்டி
தமிழருக்காய் உழைத்திட்ட
கருப்புத்தமிழன் சுயமரியாதைச்
சுடரொளியான்
அமரர் து.க.கோபால்
அவரது தலைமையிலே
அந்தமான் அலெக்சாண்டர்
அ.இரா.மருதவாணனின்
வழி காட்டுதலோடு
கழகக் கண்ம ணிகள் பலரோடு
தமிழர்களின் திரண்ட கூட்டத்தோடு
கருப்புக் கொடி காட்டி
மற்றுமோர் போராட்டம்  !

இந்தியாவின் இரும்புப்
பெண்மணியின்  சீரான தலையீட்டால்
அடிக்கல் நாட்டப் பெற்று
நிர்வாகம் பள்ளியதைக்
கட்டியது !
இன்று தமிழ்ப் பள்ளியாய்த்
திகழ்கிறது
தமிழ் மாணாக்கர்களை உருவாக்கி
மகிழ்கிறது.

எத்துணையோ போராட்டங்களைக்
கண்டவன்
தமிழுணர் வோங்கியிருக் கிறானென
உணர்வுற்றதோர் போராட்டம்
நம் தொப்புள் கொடி உறவுகள்
கண்ணீர் துளித் தேசமதில்
உயிரிழந்து உடமைதனையிழந்து
வாடி நிற்கும் வேளைதனில்
உணர்வு நிலை பொங்கி
உறவுகள் மேலோங்கி தன்னை
மறந்து தமிழுணர்வுகொண்டு
ஒன்றாய் இணைந்திட்ட தோர்வரலாறு
உறக்கம் கலைந்து
உணர்வுநிலை கொண்டெழுந்த வரலாறு
போர்ட்பிளேயர் நகர் முழுதும்
ஆர்ப்பரிக்கும் கூட்டம்
ஒன்றாய்க் கூடி நம் உறவுகளுக்காய்
எழுப்பியதோர் முழக்கம்.
தமிழுணர்வுகள் இன்னும் சாகவில்லை
என்றுணர்த்திய கூட்டம்
இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட
தமிழர் ஒன்றுகூடி
ஈழத்துவாழ் தமிழருக்காய்
குரல்கொடுத்திட்ட தோர் ஏற்றம்
ஒழுக்கமான தலைமை ஏற்க
ஒருவர் மட்டும் இருந்திட்டால்
நம்மிடையே காணும்
பிரிவினைகள் களைந்திடுமென
உணர்த்திய உன்னதப்
போராட்டம்.

உரிமைகளுக்காய்
ஓர் போராட்டம்
உற்ற மக்களுக்காய்
ஒரு போராட்டம்
தமிழருக்காய்
ஒரு  போராட்டம்
தான் பேசும் மொழிக்காய்
ஒரு போராட்டம்
இனத்திற்காய்
ஒரு போராட்டம்
இனவெறி கலைவதற்காய்
ஒரு போராட்டம்

தீவுகள் தோரும் பரந்தவன்
தீண்டாமை யற்று இருந்தவன்
தீவு முழுமையும் இருந்த
மக்களோடு சுமூக
உறவுகள் கொண்டவன்.

தீவுத்
தமிழனாய் வளர்ந்தவன்
தீவுகள் தோரும் தமிழர்
நலம் பேண
சங்கம் வைத்துக் கொண்டவன்

வடக்கு நோக்கி
பயணித்தவன் தம்
வரலாற்றுப் பெருமைகள்
உணர்ந்தவன்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து
அறுபத்து இரண்டிலே
திக்லிப்பூர் எனும் பகுதியிலே
தன்
உறவுக்காய் குடில்
ஒன்றை அமைத்திட்டான்
தமிழர் சங்கமென்றே
பெயர் வைத்திட்டான்
தமிழன் ஒற்றுமையோடு
உயர்ந்திட்டான்.

தமிழர் பலரது
அயராத முயற்சியால்
குடிலும் கோபுரமாய்
உயர்ந்தது.

செந்தமிழ் மொழிபோற்ற
சீர்மிகு கலைவளர்க்க
பண்பாட்டு நலம்காக்க
நிகழ்ந்தன விழாக்கள்
ஆண்டுகள் பலவாய்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூற்று இரண்டிலே
சங்கவளர்ச்சி கண்டு
தாளாத
அயலவர் பலரன்று
சங்கத்தின் முற்றத்தைச்
சான்றிலா இடமெனச்
சாற்றினர்.

சங்கத்திற்கு ஓர்
பங்கம் வந்ததுகண்டு
பொங்கினர் தமிழர்,
தமிழர் தம் ஒற்றுமைக்கு
முன்னாலே - நில்லாது
தகர்ந்தது நீசப்பகை !
மீண்டது
சங்க முற்றம் !
தடைகள் தளர்வுகள்
தளர்ந்து போக
தமிழர் சங்கம்
நாளும் வளர்ந்தது
நலம் பல கண்டது;
இன்றோ
ஐம்பதைக் கடந்து
பொன்விழா ஏற்றம் கொண்டது.

எத்துணை களங்கள் கண்டவன்
தனதொற்றுமையால் எதிரியைக்
கலங்கச்செய்தவன்
இன்றோ ஒற்றுமையின்மையால்
தவிக்கிறான் !
தன் உரிமைகள் பெற இயலாது
துடிக்கிறான்.

ஓ ! இன்பத் தமிழனே
உன் ஏற்றம் மறந்த தென்ன ?
உன் எண்ணங்கள் சின்னா பிண்ணப் பட்டுவிட்டதே
எண்ணிப் பார்த்தாயா !
வணங்கா முடியல்லவா நீ
இன்று உன் முடிசூடா தலை
வணங்கியது என்ன நியாயம் ?

தமிழன் ஒற்றுமை குலைந்ததேன் ?
சற்றே சிந்தித்து பார்க்கிறோம்
உண்மை நிலைதனை எண்ணித்
திகைக்கிறோம்
பொதுநலமாய்ச் சிந்தித்த
தமிழரிவர்
பொதுவாய்ப் பலராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டத்
தலைவரிவர்
தமிழனின் தன்மானத் திற்காய்
உழைத்திட்டவர்
தனக்கென ஒரு பாணியில்
செயல்பட்டவர்
தமிழன் தலைநிமிரக் காரணமாய்
இருந்திட்டவர்.

தமிழன் சற்றே முன்னேறத்
துவங்கியதும்
தான் தோன்றியாய்ச் சிலர்சேரு கின்றார்
சுயநலத்திற்காய் சுயநலமிகள்
சில முடிவெடுத்தனர்
சாதி என்கிறஆயுதத்தைத்
தம் கையிலெடுத்தனர்
அவர்தம் போக்குக்கு
இவரும் பணிந்தார்
இவரோடு இருந்த தமிழர்பலர்
பிரிந்து போக இவரே
காரண மாயிருந்தார்

சாதிய வேறுபாடுகளற்ற
தீவதனில்
மனிதமாண்புகளைப் பிரித்து
மனிதசாதிகளைத் திணித்து
ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தியதோர்
ஊர்வலம்
தமிழருக்குள் பிரிவினையை
ஏற்படுத்திய ஓர் பிரிவினைவாதம்.
தமிழர் தங்களுக்குள் அடித்துக்
கொண்ட பச்சா தாபம்
ஒருவரின் கொலைமுயற்சியில்
ஆரம்பித்து
மற்றொருவரின் உயிர்பிரிந் ததோர்
அனு தாபம்.

அன்றிலிருந்து இத் தீவதனில்
தமிழராய் இருந்த தமிழன்
இன்றோ ! சாதியப் போர்வையில்
தன்னை மறைத்தான்
தமிழனாய் திகழ்கின்ற
சிலரையும் தன் சாதியப்
பார்வையால்
சாதியப் போர்வைக்குள்
மறைத்தான் !

இன்று பல்வேறு நிலைகளில்
புறக்கணிக்கப் படுகிறான்
தன் உரிமை களைப்
பறிகொடுத்தும் ஒன்றிணைய
மறுக்கிறான்
சுயநலமே பொதுநலமாய்
உருவெடுத்த பின்பு
தாமே தலைவனாய்
தற்பெருமை கொள்பவனாய்
மாறிவிடுகிறான்.

இங்குத் தமிழனாக
இருக்க எவன் விழைகிறான் ?
அரசியல் கட்சி சாதி இவற்றுள்
இருந்து தானே தழைக்க
நினைக்கிறான் !
அதனையும் ஒரு பிழைப்பாய்
எண்ணிப்பிழைக்கிறான்
தமிழனாய் இருக்க எவன்
நினைக்கிறான் ?

இன்றுச் சுகமாய் வாழ்ந்திடும்
சிலர்
தம் முன்னோர் தமைஈந்த
சரித்திரமறியார் ;
தமிழர் துயர்து டைக்கச் செய்திட்ட
சாகசமறியார் ;
தமிழர் வளர்ச்சிக்காய் செய்திட்ட
தியாகமுமறியார் !

பல தலை முறையாய்
வாழுகின்ற தமிழர் கூட
ஒன்றிணைய  மறுக்கிறார்
ஒற்றுமையின் பெருமை போக
வெவ்வேறு திசைகளில்
பயணிக்கிறார்.

பொதுநலமாய் வாழ்ந்தவர் -இன்றோ
சுயநலமேக் கொண்டி ருக்கிறார்
தாயகத் தற்புகழ்ச்சி பேசி - தீவுத்
தமிழ ரையேப் பழிக்கிறார்.

தன்னலமே மிகுதியாய்
சரித்திர ங்களறியா வண்ணம்
தன் சந்ததிகள் சிறப்பெய் திடாதே
தடுக்கிறார்.

தமிழரென்பதை விடுத்துத் தன்னை
சாதியப் போர்வைக் குள்ளிழுத்து
சங்கடங்கள் வரும் நிலையே
சரித்திரமென் றிருக்கிறார்.

சாதி மத உயர்வினையே
உயர் நிலை என ஏற்றிடாது
தமிழர்க் கின்னல் தரும்
இழிச்செயலைக்
களைய வே ண்டும்.
நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை
கூடி முறி யடிக்க
வேண்டும்.

இன்றுமுதல் நிலை மாறி
நாம் தமிழர் நாமொருவர்
என்று உலகோர் அறியும் வண்ணம்
அரிய செயல்கள் புரிதல்
வேண்டும்.

நமக்காய் உழைத்திட்ட
நம்முன் னோர்பலர்
நாம் நல மாய் வாழ
வழிவகுத்தார் - இனிநம்
சந்ததிகள் நலமாய் வாழ்வதற்கே
உற்றபணி
செய்திடுவோம் !

தற்பெருமை பேசிப் பேசிப்
தரம்தாழ்ந்தது போதும்
தரக்குறைவாய் இனி எவரும்
பேசா துகாத் திடுவோம்.

வசதியற்ற காலத்திலே
ஒற்றுமையாய் இருந்தனரே !
வசதிகள் பெருகி வந்தவுடன்
தன்னிலை மறத்தல் நன்றோ ?
ஏமாளித் தமிழனாய்
இருந்து என்ன பயன் ?
எங்கும் தமிழன் எதிழும் தமிழன்
என்றிருக்கும் காலத்தில்
ஒற்றுமையில் ஊறு விழைவித்தல்
தான் இழுக்கன்றோ ?
இதனை
இளைஞர்கள் உணர வேண்டும்.
இன்றைய தமிழர் நிலைதனை
அறிய வேண்டும்.

தமிழருக்குச்
சாதி இல்லை மதமுமில்லை
சரித்திரப் பிழை செய்த
ஆரியரால் வந்ததே இத்
தொல்லை !

இனி யாவது இளைஞர்
ஒன்றி ணைய வேண்டும் ;
சாதிமத சாக்கடைகள்
களைந் திடல் வேண்டும் ;
தமிழர் என்றே ஒற்றுமையாய்
தமிழர் துயரது
துடைத்திடவே அயராது
உழைத்திடல் வேண்டும்.

இந்நிலை மாறி
நம்சரித்திரப் பிழையகற்றி
ஒன்றி ணைந்து நம்பெருமை
காத்திடல் வேண்டும்.

பிற்படுத்தப் பட்டோர் - நல
ஆணையப் பரிந்துரைப்பில்,
திணிக்கப்பட்ட தொரு புதுமை,
தமிழர் முழுமையாய்
புறக்கணிக்கப் பட்டதொரு கொடுமை !
ஆணை யப்பரிந் துரைப்புக் குழுவில்
அவரினத்தை மட்டும் ஆதரிக்க !
எஞ்சியிருந்த இனமெல்லாம்
இந்தமண் சொந்தமல்ல என்றேயுரைக்க
இத் தீவுதனை உருவாக்கியவர்
உருக்குலைந் தேதிகைக்க
உழைத்திட்ட தமிழருக்கோ
உரிமை தராதுதடுக்க
தேவைப்பட்ட தோர் போராட்டம் !
மீண்டும் தமிழருரிமை மீட்டிட
திரண்ட திங்கே தமிழர் கூட்டம்.

தமிழர்சங்கமது உயர்நீதி மன்ற மதை நாட
நீதி மன்றம் - பிற்படுத்தப்பட்டோர்
நல ஆ ணையத்தை நாடிடவே,
பரிந்துரைக்க சங்கமும் நாடியது
தமிழரது நிலைபற்றிக் கூறியது.
என்ன கூறி என்ன செய்ய !
எடுத்தியம்பி ஆவதென்ன ?
ஆணையத் தலைவர் ஆமோ தித்தாலும்
அங்கும் சிலர்
அரசியல்காழ்ப் புணர்ச்சியால்
கண்டும் காணாமல் போனது,
கேட்டும் கேளாமல் நின்றது,
ஆணையமும் நிர்வாகமும் சட்டமும்
அவர்பக்கம் திகழ்கின்றதே !
தமிழர் தம் உரிமைகளைத்
தரமறுக் கின்றதே !

பிறந்த மண் சொந்தமில்லா
இரந்துநாம் வாழவோ !
தமிழரே வாரும்
தடுமாற வேண்டாம்
ஒன்றாகி எல்லாரும்
உரிமை தனை மீட்போம்
இம் மண்னைக் காப்போம்.

கட்சால்  தீவுதனில்
எந்தமிழரின் வேதனையை
இயம்புதல் நன்றோ !
இயம்பாமல் போனாலது
சரித்திரப்பிழை யன்றோ ?

அன்றய தமிழனவன்
ஆங்கிலேய ஆட்சியதில்
ஈழத்தில் குடி யமர்த்த
எத்தனையோ வேதனை
ஈழத்திலே
இருக்கவழி யின்றி இருந்தான்
உறவு விட்டு, உடமை விட்டு
இலங்கை விட்டு இந்திய
உடன்பாட்டில் அகதிகளாய்
அந்தமான் தீவுதனிலே அமர்த்த,
அத் தீவு வளர்ச்சிக்காய்
அயராது உழைத்தானே !

கட்சால் தீவு பழங்குடிகள் வாழும்
பழம்பெரும் தீவு
அரசால் கூலிகளாய்
இரப்பர் தோட்டமதில்
பணியமர்த்தி வாழ்வளித்தார்.
பிறமொழி அகதிகள் போல்
தமிழருக்கும் தரமுயர
நிர்வாகம் பரிந்துரைக்கும்
என்றே உழைத்து
ஏமாற்றம் கிட்டியதே !

வீடும் வீட்டுக்கொரு வேலையும்
விவசாய விளைநிலம் என்றே,
மற்ற அகதிக்கு தந்ததுபோல்
அரசு தமக்களிக்கும் என நினைத்து
ஏக்கத்தின் எதிர்பார்ப்பில்
இருக்கின்றார்,
இருக்கும் இருப்பிடமும்
தொலைந்திடுமோவெனக்
கண்ணீர் மல்கிடவே
கதைக்கின்றார்.

வங்காள அகதிக்கோர் வசதியாம்
பத்து ஏக்கர் இடமும்,
பல்வேறு சலுகையாம்,
பிற்படுத்தோர் பட்டியலில்
முன்னுரிமை, வேலையிலும் !
தமிழரை மட்டும் - ஏனோ
தள்ளி வைத்து பார்க்கிறதே !
வியர்வையுடன் கண்ணீரும்
விழுந்தாலும் வீணாக
கிள்ளி வைக்கப் பார்க்கிறதே !

கட்சால் தமிழருக்காய்
பல்வேறு நிலைகளில்
பலகட்டப் போராட்டம்.
அந்தமான் தமிழர் சங்கம்
அதையெடுத்துப் போராடி
அனைத்துக் கட்சி தமிழ்த்தலைவர்
அனைவரையும் ஒன்றாக்கி,
மாநில மைய அரசுக்கு எடுத்தியம்பி
பதிலில்லா காரணத்தால்
பசியுற்ற போராட்டம் !
பசுந்தமிழர் அகதிக்காய்
உணவு உண்ணா போராட்டம் !

தமிழரோடு பிறமொழியார்
தந்தனரே ஆதரவு.
மாபெரும் போராட்டம்
மைய அரசு மாநிலமும்
அறிந்திட அறப்போராட்டம்
அருந்தமிழர் அனைவருடன்
இன்றுவரை தொடர்கிறது
உன்னதப் போராட்டம்.
உரிமைகாக்க உடமைகாக்க
உயர்நீதிப் போராட்டம்.

ஒற்றுமையை உருக்குலைத்து
ஓட்டு வாங்கித் தமிழரையே
எருவாக்கி எரிகின்றார்
ஏறியதும் சிரிக்கின்றார்
ஏளனமாய்க் கை விரிக்கின்றார் !

தமிழன்
பொறுப் பேற்க மறுக்கிறான் - பிறர்
ஏற்கும் பொறுப்பினை
எள்ளி நகைக்கிறான்
சாதுரியம் பேசிப்பேசி
சங்கடங்கள் ஏற்கிறான்.

அரசியல் சாதீயத்தை
ஆணிவேராய் நினைக்கிறான்,
அடுத்தவர்க்கு தோள்கொடுத்து
ஆர்ப்பரித்து நிற்கிறான்.

என்று மாறும் இந்தநிலை
என்றுணர்வர் எந்தமிழர்
காலம் வெல்லும் காலம்
வரை காத்திருப்போம்
காவலராய் !.

@@@@@



ஈழம் . . . .


ஆண்ட தமிழ் பெருமை சாற்றும்
ஆதிக்க தமிழ்ப் புலமை போற்றும்
ஆதி இலெமூ ரியாக் கண்டத்தின்
ஆதி சான்றாய் விளங்கி நிற்கும்
ஆசியக் கண்டமிது.

வந்தவர்க்கு கரம்கொடுத்து - அவர்
வருங்கால சந்ததிக்கும்
வறுமை போக்கி வாழ்வளித்து
வசந்தங்களை பங்குபோட்டு
வாழ்வளித்த கண்டமிது.

பிழைப்பு தேடி வந்தவன்
ஒற்றுமையாய் உயர்ந்திருக்க
பிழைப்பைக் கொடுத்தத் தமிழரோ
வேற்றுமையில் பிரிந்திருக்க !

கருனையின்றிக் கருணாவோ
காட்டிக் கொடுத்து பிழைத்திருக்க
தந்நிகரில்லாத் தலைமகனை
இழந்து தமிழர் வாடிநிற்க !

சிறு பிள்ளை பாலகனும்
தமிழினத்தில் பிறந்ததினால்
தாங்கொனாத் துயரத்துடன்
தமதுயிர் விதைத்திழந்தானே !

கொடுங்கோலரக்கர் கூட்டமதில்
நந் தமிழர் அகப்பட்டு
சூழ்ச்சி வலையில் சிக்குட்டு
சூனியமாய்ப் போனதென்ன !

ராசபட்சே இராட்சசனாய்
மாறிவிட்ட அவலத்தினை
கூடி நின்று கேட்டிடவே
கோடி சனம் இருந்தும் என்ன ?

உலகம் முழுதும் இருக்கின்றோம்
உணர்வற்றா பிறக்கின்றோம்
இத்துனைத் தமிழர் அழிந்த பிறகும்
தமிழனாய் ஏன் இருக்கின்றோம்

தமிழினை ஏன் உரைக்கின்றோம் ?
ரெளத்திரம் பழகு என்றான் பாரதி
எதிரியைக் கூட மன்னிக்கலாம்
துரோகியை ! தமிழினத் துரோகியை

தலை சிறந்தத்  தமிழினம்
தம் புகழ் இழந்து நிற்பதென்ன !
அன்று முதல் இன்று வரை
எதிரிகளால் மட்டு மல்ல !
துரோகிகளின் சூழ்ச்சி தானே !

நினைத்து நினைத்து நெஞ் சகத்து
குருதி வடித்து வடித்து
உருகி உருகிச் சாவதை விட
உரிமைக்காய் என்ன செய்வதினி ?

ஒட்டு மொத்த தமிழனும் ஓர்நாள்
ஈழம் நோக்கி பயணிப்போம்
ஈன்ற தமிழ் மண்ணதையே
நம தாக்கிடவே சபதிப்போம்.

சாதியம். . ..


சாதி என்ற சாக்கடை
சமத்து வமாய் உலவுதே
சாமானியரை சரிசமமாய்
ஏற்றுக் கொள்ள மறுக்குதே
சத்தியம் உறைக்குதே !

சாதி சாதி என்னடா ?
எங்கிருந்து வந்தது ?
தமிழினத்தைக் கூறு போட
ஆரியம் கொணர்ந்ததா!

சாதி விட்டு சாதி விட்டு
சாதியம் தொலைத்து விட்டு
மனித நேயம் மக்கள் பண்பு
என்று தான் கொணர்வதோ !

தமிழனைப் பிரித்த மாயை
ஆரியம் விரித்த தோகை
மாயையில் மயங்கி நாமும்
தயங்கியே திரிவதேன் ?

மேலானவன் கீழானவன்
வகுத்தவன் யாரடா ?
பிறந்த பிறப்பினை கூறுபோடும்
பிற் போக்கிகளைப் பாரடா !

கூட்டமாய் வாழ்ந்தவன்
குழுக்களாய்ப் பிரிந்தவன்
வாழ்ந்தவந்த இடத்திற்கேற்ப
தன்னை மாற்றிக் கொண்டவன்.

செய்யும் தொழிலைத் தெய்வமாய்
சிறக்க போற்றி வாழ்ந்தவன்
தொழில் அனைத்தும் சாதியாய் - மாற்றி
ஞானம் கொண்ட தேனடா !

நம்மைப் பிரித்து வாழ்ந்தவன்
நம்மில் உயர்வு கொண்டவனாய்
இருக்க வழி வகுத்து - நம்மைத்
தாழ்த்திக் கொண்ட தேனடா ?

மனிதனாய் பிறத்தலே
மக்கட்பன்பு கொள்தலே
மக்களின்று மாக்களாய்
மாறிப்போன தேனடா .

மனிதன் தெய்வ நிலையிலே
மாறிப்போக நினைக்கிலும்
மனிதன் முதலில் மனிதனாய்
மாறி நிற்க வேணுமே !

உயர்வு தாழ்வு அற்று நீர்
உண்டுறங்கி மகிழவே
உண்மை நிலை எண்ணியே
உத்தமராய் வாழலாம்.

Friday, December 28, 2012

யுவசக்தி. . .


எழுச்சிமிகு இளைஞர்களின் எண்ணத்துதித்த சக்தி
ஏகலைவனைப் போல் எழுந்த சக்தி

தன்னலம் துறந்த சக்தி
தனித்துவத்தோடு திகழும் சக்தி

மகளிர்க் கொடுமை அறுக்கும் சக்தி
மக்களின் மாண்பை காக்கும் சக்தி

பெண்ணின் பெருமை பேசும் சக்தி
பெண்டிர்க்குரிமை உணர்த்தும் சக்தி

தீவு தோறும் சுழலும் சக்தி
தீண்டாமையை அகற்றும் சக்தி

இளைஞர்களின் எழுச்சி சக்தி
இயலாமையைத் தடுக்கும் சக்தி

சுயமாய் சிந்திக்க வைக்கும் சக்தி
சுயமுன்னேற்றத்தைக் கொடுக்கும் சக்தி

எளிமையோடு திகழும் சக்தி
மக்களின் ஏழ்மை நிலைதனை அகற்றும் சக்தி

சமுதாய ஏற்றம் காணும் சக்தி
சமத்துவ கோட்பாடு கொண்ட சக்தி

நாளைய சமுதாய ஊக்க சக்தி
நாளது சரித்திரம் படைத்திடும் சக்தி.

Monday, October 15, 2012

தேவர்


பசும்பொன் கண்டெடுத்த
பத்தரைமாத்துத் தங்கமாம்

உக்கிரபாண்டி இந்திராணி - ஈன்றெடுத்த
இயற்றமிழ் சொற்றொடராம்

ஊரறிந்த நாயகனாம் - தேவர்
உண்மை உரைப்பவராம்

வீரத்தின் விளைநிலமாம் - தேவர்
விவேகத்தின் சுடரொளியாம்

ஆன்மிகத்தின் அறிவொளியாம் - தேவர்
அரசியலின் கலங்கரை விளக்காம்

தேசிய விடுதலைக்காய் - தேவர்
தீராதுழைத்திட்டார்

கால்பகுதி வாழ்நாளில் - தேவர்
சிறைதனிலே கழித்திட்டார்

அடிமைத்தளைகள் அறுந்திடவே - தேவர்
அயராது ளைத்திட்டார்

ஆள் பிடிக்கும் சட்டத்தினை - தேவர்
அடியோடு அகற்றிட்டார்

நேதாஜி போஸ் உடனே - தேவர்
நேர்மையோடு பாடுபட்டார்

ஊர் முழுக்க படை திரட்டி - தேவர்
ஒன்றிணைந்து உழைத்திட்டார்

தீண்டாமை ஒழிந்திடவே - தேவர்
தீர்க்கமாக செயல்பட்டார்

தமிழகம் முழுவதிலும் - தேவர்
தளராத் தொண்டு செய்தார்

காங்கிரஸ் கட்சியினை - தேவர்
கால்பதிக்க வைத்திட்டார்

ஊருக்காய் உழைத்தவர் - தேவர்
உண்மையாய் வாழ்ந்தவர்.

சாதியம் மறுத்தவர் - தேவர்
சமத்துவம் கண்டவர்

சமபந்திதனை கொண்டு - தேவர்
சமரசம் கண்டவர்

தம் சொத்துக்களை  - தேவர்
சரிபங்கு பகிர்ந்தளித்தார்

சாதி மத பேதமன்றி - சம பங்கு
தானளித்தார் தேவர்

தேசியம் காத்திட்டார் - தேவர்
தெய்வீகம் கண்டுணர்ந்தார்

தன்நலம் கறுதாது என்றும்
பிறர் நலம் காத்தவர் - தேவர்.

 ***

Wednesday, May 23, 2012

ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்


ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்

காவியில் சிலர்
காதியில் பலர்
காக்கி உடுப்பிலும்
காக்கும் பொருப்பிலும்
அதிகார வர்க்கத்தின்
ஆதிக்க நிலையிலும்
இன மொழி மதவாத
மதிப்புமிகு மருவாதைகளும்
பணத்திற்காய் நித்தம்
பிணம் தின்னும் கழுகுகளும்
சமூக அந்தஸ்துள்ள
சமயப் பெருச்சாளிகளும்
சுயநலத்தின் சுகத்திற்காய்
ஏங்கும் சுயவிளம்பரப்பிரியர்களும்
எது நிகழ்ந்தாலும் எமக்கென்ன
என்று திரியும் ஏதிலிகளும்
வீண் பேச்சு பேசி வெட்டியாய்த்
திரியும் வெடலைகளும்
எந்தப் பொருப்பும் ஏற்க்க மறுக்கும்
பொருப்பில்லாதவர்களும்
உலக நடப்பு தெரிந்தும் தெரியாதவர்களாய்
திரியும் கணவான்களும்
வாக்கு போடக்கூட வாக்கிங் செல்ல
துணிபு இல்லா சோம்பேரிகளும்
நோட்டுக்கு ஓட்டு என்று
விலை பேசும் வித்தகர்களும்
விலைபேசி வாக்களிக்கும்
சாமானியரும்
தவறு கண்டும் காணாதவராய்
போகும் குருடர்களும்
கலப்படத் தொழில் செய்யும்
கலப்பினமும்
விளையாட்டுகளை விலை
பேசும் வீணர்களும்
அகம் ஒன்று புறம் ஒன்றாய்
ஜெகம் போற்ற வாழ்பவரும்
இது போன்ற இன்னும் பலர்
இதே வழியில் செல்பவர்கள். . .
ஊரை மட்டு மல்ல உலகை கெடுக்கும் உத்தமர்கள்.

Monday, May 21, 2012

அன்னா ஹசாரே



உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்
உயரம் சற்றே குறைந்தவர்
ஊழல் ஒழிக்க பாடுபடும்
உண்மையான தொண்டரிவர்.

என்பது வயதுகள் தாண்டியும்
ஈரெட்டு வயதாய் உழைக்கின்றார்
என்ன உழைத்து பார்த்திடினும்
துவங்கிய இடத்திலே இருக்கின்றார்.

ஊர் முழுக்க இளைஞர் படைதிரட்டி
உன்னதமான பணி சிறக்க
ஓடி ஓடி உழைக்கின்றார் உடலின்
ஒத்துழையாமையைத் தடுக்கின்றார்.

ஊழல் ஒன்றே உண்மை என்று
உழைக்கும் உத்தமர் நடுவினிலே
ஊழல் அற்ற உலகம் படைக்க
நினைப்பவர் பாடு புரிந்திடுமே !

உலகம் முழுக்க ஊழல் என்று
ஊரிப்போன பின்பு கூட
ஊழல் அறுக்க ஊர்முழுக்க
படை திரட்டிடும் பண்பை என்ன சொல்ல ?

காலம் ஒருநாள் மாறும்
இவர் கனவுகள் யாவும் தீரும்
பட்டங்கள் ஆள்பவர் மத்தியிலே- சில
சட்டங்கள் ஆளும் காலம் வரும்.
***

Friday, May 18, 2012

சூழ்ச்சி


சுழழுகின்ற புவிமுழுதும்
சூழ்ந்து நின்ற போதிலும்
சூனியத்தின் முயற்ச்சியால்
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

ஆளுகின்ற ஆட்சிகளின்
அடிமைத்தன புத்தியால்
சக்தியொன்று அழிந்து போக
சூழ்ச்சியொன்று நடக்குதே

தனித் தமிழின் பெருமைபோல
துணிந்துநிற்கும் மறத் தமிழனை
சூழ்ந்து நின்று கைதியாக்க
சூழ்ச்சியொன்று நடக்குதே

ஏழுநாடு ஒன்று கூடி
ஏமாந்த வேளையில்
எந்தமிழரை வென்றுபோக
சூழ்ச்சியொன்று நடக்குதே

ஆண்டதமிழ் பெருமை தனை
அறியாத் தமிழர் ஒருவரை
ஆசைகாட்டி மோசம் செய்ய
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

அடிமைத்தனத்தின் மடமையோடு
மாறுபட்டுத் திகழ்ந்திட - நம்
ஆனிவேரை அறுப்பதற்கு
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

என்னவளே !

உயிரோ அல்ல உடலோ -என்
இதயத்தில் உதித்த மலரோ

கனவோ அல்ல நினைவோ
அவள் கலந்ததென்ன உறவோ

இசையோ அல்ல மழையோ- ஈருடல் 
சேரும் போதென்ன நிலையோ

குயிலோ அல்ல குரலோ- அவள் 
கூவுவதென்ன மொழியோ

நிலவோ கடும் குளிரோ -அவள்
கண்களில் அத்துனை நிறைவோ

இதமோ அல்ல பதமோ
இயற்கையே இது தகுமோ

மகரந்த ங்களின் மழையோ- சற்றே
இதமாய் தாங்கிடும் துணிவோ

அகரம் முதலாய் அவளோ
அஃகு பஞ்ச்சரான நிலையோ

பிரபஞ்சத்தில் ஆதி முதலாகவே -இதுவோ
இங்கு நிகழ்வது தான் புதிதோ

இயற்கையி
ல் நியதிகள் உளதோ
உணர்வுற்ற பின்னே பிரிவோ.

Sunday, April 15, 2012

சிவம் அனைவருக்கும் சமம் (சிவலிங்கம் ஒரு பார்வை)

இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல). தமிழில் - இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன. இதனுடைய விளக்கம் இலக்கு = குறிக்கோள், இலங்குதல் = ஒளிர்தல், விளங்குதல் என்பதாக அமைகிறது. இலிங்கம் - ஆன்மா வாகிய உயிர் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் சின்னமாக உள்ளது எனலாம். இலிங்கம் என்றால் உயிர், அணு. ஒன்றரை இலட்சம் அணுக்கள் சேர்ந்ததுதான் ஒரு மனித உயிர். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம். இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு. இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு. இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம். இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள். இலிங்கம் எனும் சொல் வடமொழியிலிருந்து வந்தது என்பதை ஏற்றுக்கொள்ளளாகாது. கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது எனலாம் இதனயே சேக்கிழார் பெருமான்: “காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”. என்கிறார் பரம்பொருளான சிவ பெருமான் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது. இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா சீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருட்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விட்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது. இலிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விட்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை நாம் உணரலாம். இந்தப் பிரமாண்டமே இலிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது. இதனையே அன்பே சிவம் என்கிறார் திருமூலர், “அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே” இப்பாடலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியதொன்றிருக்கிறது ……. திருமூலர் அன்பு என்று எதனைக் குறிப்பிடுகிறார் ,நாம் அனைவரும் இவ் அன்பானது ஒருவர் பிறர் மீது செலுத்தும் அன்பு என்று தான் நினைத்திருக்கிறோம் அல்லவா ஆனால் இப் பாடலை ஊன்றிக் கவனித்தால் அதனுடைய பொருள் விளங்க்கும் …….இது நாம் அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு அல்ல……. நமது உடம்பில் எங்கு அன்பு உருவாகிறதோ அல்லது எங்கு நிலை கொள்கிறதோ அதை தான் திருமூலர் சிவம் என்று சொல்கிறார். இதைதான் வள்ளல் பெருமானும் ஆன்ம நேய வழிபாடு என்று சொல்கிறார். சரி உடம்பில் அன்பு உருவாகும் இடம் எது? இதனை நாம் நங்கு கவனிப்போமேயானால் நம்மில் சில நண்பர்கள், அல்லது சில யோகிகள் எப்பொழுதும் சினம் கொள்ளமால் அமைதியாகவும் அன்புடனுமே இருப்பார்கள். நீங்கள் எவ்வாறு இப்படி சினம் அடையாமல் இருகிறிர்கள் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அவர் உடன் இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள் ‘அவர் சிறு வயது முதலே இப்படிதான் அன்பாக இருப்பார்’ கோபம் கொள்ளமாட்டார் என்று. சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று “அதெல்லாம் பிறப்பிலே அமையவேண்டும் அல்லது யோகத்தினால் அமையவேண்டும்” என்று சொல்வார்கள். அது என்ன பிறப்பிலே அமைவது? அது வேறொன்றுமில்லை….. உயிரிலே அமைய வேண்டும் என்பதைத்தான் புரியாமல் சொல்கிறார்கள். ஆம் நம் உயிர் தன்மை எந்த அளவு அன்பு மயமாக இருக்கிறதோ அந்த அளவு நாமும் மற்ற உயிர்களிடம் அன்பாக இருக்க முடியும். அது என்ன உயிர் தன்மை? நம் உயிரின் தன்மைதான். அதை எவ்வாறு அடைவது? நாம் செய்யும் தவம் நம் உயிர் தன்மையை தொட வேண்டும். அவ்வாறு உயிர் தன்மையை தொட்டு தவம் செய்தோமேயானால் அப்பொழுது உள்ளூர ஒன்று நடந்தேறும். அது என்ன? அதைத்தான் வள்ளல் பெருமான் சொல்கிறார், “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து - அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரச என்னுரிமை நாயகனே என்ற வனைந்து வனைந்து ஏத்ததும நாம் வம்மின் உலகியலீர மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” அது என்ன நம் உயிர் தன்மையை தொட்டு செய்யும் தவம் , நம் உயிர் எங்கு இருக்கிறது அதை அடையும் வழியை எவ்வாறு அடைவது என்று தெரிந்து தவம் செய்வதே ஆகும். அன்பே சிவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்பு நம் உடலில் எந்த விடயத்துடன் சேர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆம் அது உயிருடன் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பெனும் வடிவத்தில் சிவமாய் நிற்கிறது. இதை ஞானிகள் உணர்ந்ததால்தான். இயேசு ‘அயலானையும் நேசி’ என்றார். வள்ளல் பெருமான் சீவ காருன்யமே (கொலை தவிர்த்தலே) கடவுளை அடையும் வழி என்கிறார். உயிர் எங்கு இருக்கிறது? உயிர் பற்றி திருமூலர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று பாப்போம்? இந்த பாடலில் திருமூலர் உயிர் பற்றி மட்டும் சொல்லவில்லை. சிவலிங்கம் என்பது என்ன என்பதை பற்றியும் சொல்கிறார், இதன் மூலம் காலம் காலமாக சிவலிங்கம் பற்றிய சிலரது தவறான கண்ணோட்டத்தை சம்மட்டியால் அடித்து எறிகிறார் (Some people used to say it’s sexual organ…….but it’s not true). அந்த பாடல் “உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே” நாம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தான் கையெடுத்து கும்பிடுகிறோம். இந்த பாடலின் முதல் வரியிலே திருமூலர் ஐயா… சொல்லிவிட்டார் ஊனுடம்பு ஆலயம் என்று…நம் உடம்புதான் ஆலயம் என்று சொல்லி விட்டார், பின் சிவலிங்கம் மட்டும் என்ன ஆலயத்திற்கு வெளியிலா இருக்கும்? ஒரு படி மேலே சென்று “சீவன் சிவலிங்கம்” என்றும் சொல்லி விட்டார், இப்பொழுது ஒன்றை உணரவேண்டும் ஏன் நாம் செய்யும் தவம் நமது உயிர்த் தன்மையை தொட வேண்டும் என்று, நாம் கையெடுத்து கும்பிட வேண்டிய சிவலிங்கம் புறத்தில் உள்ள ஆலயத்தில் மட்டும் இல்லை, ஊனுடம்பாகிய நம் உடம்பினுல்லும் இருக்கிறார், இதைதான் “உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனை தேடு” -என்று அவ்வை பிராட்டியும் சொல்கிறார், “திடம்பட ஈசனை தேடு” –அவ்வையார் சொல்லி விட்டார். எங்கு போய் தேடுவது? உடம்பினுள் இருக்கார் என்று திருமூலரும் மற்றும் அவ்வையாரும் சொல்லி விட்டார்கள் இன்னும் வேறு ஏதாவது நெருங்கி சொல்லி இருகிறார்களா? என்றால் திருமூலர் இன்னும் அருகில் சொல்கிறார் “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று ஒரு பாடலில் சொல்கிறார் இதன் மூலம் சிவம் என்னும் சீவனாகிய உயிர் தலையில் தான் அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார். ஆம், சிவம் என்றால் ஒளி என்றே பொருள்படும். சிவம் என்பது தனிப்பட்ட சாதிக்கோ, சமயத்திற்கோ உரியவர் அல்ல, இவர் எல்லா மனிதர்களிடமும் உள்ளார் என்பதை ‘வள்ளல் பெருமான்’மிக தீர்க்கமாக நம்பியதால்தான் இப்படி பாடினார்:- “சாதியும் மதமும் சமயமும் பொய் எனஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி” சிவம் இனம், மதம், மொழி எல்லாம் கடந்து எல்லோருடைய தலை பகுதியில் இருக்கிறார் என்பதாகும். ஆம், “தேவன் ஒளியாய் இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்” – இயேசு கிறித்து அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா ஞானிகளும் கடவுள் ஒளியாக இருக்கிறார் என்றே சொன்னார்கள். அபபடி எனில் கடவுளை அடையும் வழியும் ஒன்றாகவே இருக்கும். அதாவது எல்லா ஞானிகளும் இறைவனை அடைய செய்த முயற்ச்சியும் ஒன்றாகவே இருக்கும். அன்பே உருவாக சிவத்தை நினைந்திடுவோம். அன்புடன் பி.செண்பகராஜா.

Thursday, April 12, 2012

தமிழர் சங்கமதில் சித்திரை விழா 2012 அன்று கவியரங்கமதில் வாசித்த கவிதை இது.

தமிழர் சங்க கலையரங்கில்
தமிழர் திருநாளாமதனில் 
அந்தமானின் கவிச்சக்கரவர்த்தி நடுவிறுக்க 
கவிஞர்கள் பலரும் அவரைச் சூழ்ந்திருக்க
சாட்ச்சியாய் தமிழறிஞர் பலர் முன்னிருக்க
அடியேனும் வந்தேன் அரங்கமதில் தமிழ் மணக்க
பலரும் கூடுகிறார் இந்நாளில் பலவும் தேடுகிறார் இன் நன்நாளில் நினைவலைகள் பலவோடு நான் மட்டும் நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன் நிதர்சனத்தை
எனது கவிதையின் தலைப்பு:
நினைத்துப் பார்க்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழனிவன்
வடக்கிறுந்து வந்தவளை பூசிப்பவன்
ஆண்டு தோறும் உதிக்கும் சித்திரையே
தமிழாண்டில் நீ பதிக்கும் முத்திரையே
தமிழர்களின் பால் நீ உதிக்கையிலே
உன்னைப் பல்லாண்டு துதி பாடி வணங்கினரே !
காக்கும் கரமென்றுனை நினைத்தோம்
ஆனால் எமை காட்டிக் கொடுத்திட்டவளென்று பின் உணர்ந்தோம்
பிற மொழியின் பெயர் தாங்கி பிறந்ததினால்
எம் பிறப்பின் சரித்திரத்தை நீ அறியாய்
விரோதியாம் ஆண்டிலே எங்கள் வேரறுத்தாய்
அது முதலாய் எம்மவரை புறக்கணித்தாய்
உன் கறை படிந்த கரம் தனை நீ கழுவப் பார்க்கிறாய்
எம்மிடமிருந்து நீ நழுவப் பார்க்கிறாய்
தனை மறந்தாலும் தமிழன் இதனை மறவான்
மே பதினேழு முள்ளிவாய்க்கால் கொடுமைதனை எவன் மறப்பான்
நீ சாட்சியோ அல்ல சண்டாளர்களின் சூழ்ச்சியோ
நான் அறியேன் என்னவிலை கொடுத்திடினும்
இதற்கு ஈடு இனி எதுவுமில்லை
மானத்தோடு வாழ்ந்திட்ட மறத்தமிழர் கூட்டம்
தன் மானம்காக்க வழியில்லையே
உலகெலாம் உவந்து உணவளித்தவன் பரம்பரைக்கு
இன்று உவக்க ஒரு வாய் உணவில்லையே
அய்யகோ என்ன செய்வேன்
குற்றமென்ன என் குற்றமென்ன தாயே
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழைப்போற்றியதால் குற்றமா
தமிழானாய் வாழ்ந்தது தான் குற்றமா
தமிழைப் பேசியதால் குற்றமா
எனது குற்றம் என்னவென்று நான் அறியுமுன்னே
எந்தமிழர் வெந்தீயில் சூழ்ந்ததென்ன கொடுமை
நடத்திட்டாய் உமது சூழ்ச்சியாலே எம்மவரை
கொன்று குவித்திட்டாய் இனி எமக்கு
ஆண்டும் புதிதல்ல மாதமும் புதிதல்ல
தமிழரைப் பழிதீர்த்த நாளும் இனிநமதல்ல !
நடந்ததெதுவும் கதையுமல்ல
நடப்பதெதுவும் முறையுமல்ல
நித்தம் செத்துப் பிழைப்பவனுக்கு
இனி சித்திரையோ நித்திரையோ எதுவுமில்லை
பழியோடு பிறந்திடும் நந்தனமே
உன் முன்னோர் இழைத்திட்ட பழி தீர்க்க
நீயாவது பாடுபடு
தமிழர் துதி பாடும் சித்திரையே
உன் நித்திரை கலைந்தெம்மை வாழவிடு
எத்துனை தான் மருந்துகள் இட்டினும்
காயத்தின் வடுக்கள் என்றும் அழிவதில்லை
எந்தமிழர் இன்புற்று வாழ்ந்திடவே
நீ ஏதாவது செய்திட நினைந்திட்டால்
இனி தமிழ் தேசம் தனக்கென்று முழங்கிடவே
வழி வகை ஏதேனும் செய்திடுவாய் தமிழாண்டே
! இனி வழிவகை ஏதேனும் செய்திடுவாய் நல்லாண்டே !!

Wednesday, March 21, 2012

ஸ்ரீ ரவிசங்கர்

அரசியல் ஆதாயம் தேடி ஆபத்பாந்தவனின் அடிமுடிசூடி இயலாமையின் இயல்போடு ஈனப் பிறவிகளாய் உழன்று உண்மைக்கு மாறான தகவல்களை ஊர்முழுக்க ஒப்பித்து எவரையும் பொருட்படுத்தாது ஏதேனும் கூறி ஐயத்தை ஏற்படுத்தும் அறிவிளிகளின் வரிசையில் ஒற்றுமையாக ஓர் அணியில் - சமுதாயத்திற்கு ஓளடதமாய் இருக்க வேண்டியவர்கள்- இன்று அஃகு பஞ்ச்சர்களாய் அனைவர் மனதில் ..

Sunday, January 29, 2012

குடியரசு தினம்

இந்தியப் பேரரசின் 63வது குடியரசு தினம்
கோலாகலமான கொண்டாட்டம்
வரலாறு காணாத பாதுகாப்புடன்
புதுதில்லி திகழ்கிறது (ப)புதுமையாய்
குண்டு துளைக்காத ஊர்தியில்
காவலர்களின் அணிவகுப்புகளோடு
பவனிவருகிறார் பாரதத்தின் குடியரசுத் தலைவர்
இத் தேசமதில் ஏனோஇன்னும்
ஒழியவில்லை பட்டினிச்சாவு
பஞ்சாபில் பயங்கரவாதம்
வங்கத்திலோ நக்சல் தீவிரவாதம்
ஆந்திராவில் தெழுங்கானா கோரிக்கை
காஷ்மீரிலோ தீவிரவாதி ஊடுருவல் - இட
ஒதுக்கீட்டுப் பட்டியலில் உரிமை கோரி
உ.பி மற்றும் ம.பி யில் போராட்டம்
தமிழகத்தில் தண்ணீர் இல்லை
இருக்கும் கேரளமோ தர மறுக்கிறது
கருநாடகத்திலோ சகோதர ஊழல் என்றால்
தலைநகரிலோ விளையாட்டுத் துறையில்
தாயகத்தினை காக்கும் பொருப்பிலிருக்கும்
பெரியவரின் பிறந்த நாள் கணக்கிலே பிழை
எல்லையோர கடல் பகுதியில் - என்றென்றும்
மீளாத் துயரம் மீனவர்களின் வாழ்வில்
எரிகிற வீட்டில் பிடுங்கியமட்டும் லாபம்
என்பதைப் போல்
எது எப்படி இருந்தாலும் ஊழல் மட்டும்
ஒழியவில்லை இன்னும் நம் தேசத்தில்
நாள்தோறும் கொலை நாடுதோறும் கொள்ளை
தெருவெங்கும் முழக்கம் - தேசம்
முழுதும் கலக்கம்
அரசியல் ஆதாயத்தில்
இன்னும் அரைகுறை வியாபாரிகள்
நம் தேசத்தினை ஆள
இன்னும் எத்தனை நாள்
அறிக்கைகளும் அறிவிப்புகளும்
இலவசமாய்
அனைவருக்கும் பொதுவான கல்வி
தேச நதிநீர்த்திட்டம்
படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு
இவை போன்ற இன்னும் பல
பேசுவது பெருமையாய்தான் இருக்கிறது
இன்னும் எத்தனை வருடங்கள்
என்றுதான் புரியவில்லை
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவனை தூக்கி நடுவில் வை
என்பதனைப் போல்
நாமும் கொண்டாடுகிறோம்
குடியரசு நாளிதனை.

Tuesday, January 24, 2012

திருமண வாழ்த்து

அறுகு போல் வேரோடி
ஆல் போல் தழைத்து
இன் தமிழ்ச்சுவைபோல் இயைந்து
ஈகை பல புரிந்து
உற்ற தமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த யாக்கை பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய் உறவாடி
ஓங்கார ஒலியெழுப்பி
ஒளடதங்கள் நீங்க
ஃதோடு வாழ்வாங்கு வாழியவே.

Sunday, January 22, 2012

படிப்பவர் பயனுர

பிரார்த்தனை

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம்,
தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம்,
இன்னுயிர்ச் சாலம் எல்லாம் இறைவனின் உருஎன்(று) ஓர்தல்,
நின்னடி த்யான யோகம் நிதமெனக்(கு) அருள்வாயே.

மனதினை உன்னில் ஊன்றி, வாழ்வு தாழ்வுற்ற போதும்,
மனநிலை சாய்ந்திடாமல், வாய்த்ததில் திருப்தியுற்று,
வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்றுமின்றி,
இனிது வாழ்ந் திட எனக்குன் இன்னருள் செய்குவாயே.

எப்பணி செய்யும் போதும், எவ்வுண வுண்ணும் போதும்,
தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும்
அப்பனே அவற்றை யெல்லாம் அன்புடன் உன் தாளினையில்
அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே.

உன்னை எக்காலும் என்றன் உளமதில் எண்ணி நின்றுன்
பொன்னடிச் சரோருகத்தைப் போற்றி நமஸ்கரித்துன்
இன்னருட் கடலில் மூழ்கி, எவற்றினும் உன்னைக் கண்டு
தன்னிய னாகி வாழத் தமியனுக்(கு) அருள் செய்வாயே.

விருப்பமும் வெறுப்பும் இன்றி வினைப்பயன் எல்லாம் உன்றன்
திருப்பதம் தன்னில் சேர்த்துத் திருப்பதியும் திறனு முற்று
ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே.

திருச்சிற்றம்பலம்.

Tuesday, January 17, 2012

வானொலி நிலையத்தில் பொங்கல் 2012 நிகழ்ச்சிக்காக வாசித்த கவிதை

"பொங்கிடுவோம் பொங்கலின்று"

கவிஞர் கூடும் சபைதனிலே
காலம் கொடுத்திட்ட கட்டாயத்தால்
சிந்தனை சிக்கெடுத்து
சீர்வாரி பூதொடுத்து
தமிழர் நலம் பேணுதற்கு
வைக்கின்றேன் பா சபைக்கு !

எளியவனின் எண்ணங்களுக்கு
ஏற்றமிகு செவிமடுத்து
கேட்டிடுவீர் பெரியோரே
இதுவும் ஒரு பா தானே !

தமிழ் மண்ணில் பல கவிகள்
பாரதி முதல் தாசன் வரை
பார் அதில் எளியவனும்
கவிபுனைந்தேன் அதிசயமே !

தமிழோசை முழங்கச்செய்வதில்
வானொலிக்கு முதலிடமாம்
வான் தந்திட்ட ஒலிக்காக
புனைய வந்தோம் பாவும் நாமே !

என்னுடன் பாடவந்த பாவலர்களுடனே
செவிமடுக்கும் எந் தமிழர் செழிப்புற்று வாழ்ந்திடவே
தைத் திருநாள் தனிலே வாழ்த்துகின்றேன்
பாதனிலே !

புது வருடமும் பிறந்ததுவே
போகியும் கழிந்ததுவே
பழையன கழிந்து புதியன புகுந்து
பொங்கல் தினமும் வந்ததுவே

தைத் திங்கள் முதல் நாளே
தமிழருக்குத் திருநாளாம்
திருநாள் வரும் முதல் நாளில்
சிந்தனைகள்சில சிறகடிக்குதே !

போராடும் குணமே நமக்கென்பர்
போராட்டமே வாழ்க்கையுமென்பர்
போராட்டக் களத்தின் நடுவினிலே
போட்டுக் கொடுத்தவனும் தமிழரென்பர்

காக்கைக்கும் தம் குஞ்சு பொன்குஞ் சாம்
எலிவலையானாலும் தனிவலை யாம்
எலிக்கெல்லாம் வலையுண்டு புவியினிலே
எம்மவர்க்கு எங்குண்டு தெரியிலியே

கல்தோன்றி மண்தோண்றா காலத்தே
வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்பர்
எங்கு என்று எவர் அறிவர் ?
எங்கும் அவர் என்றே கூறுவர்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும்
பிறந்த நாள் பின் இறக்கும்
இறந்த நாட்களை நினைவு கூர்ந்து
இடைவிடாது உழைத்திடுவோம்

உழைக்கும் வர்க்கம் உயர்ந்திடல் வேண்டும்
உன்னதமான சிந்தனை வேண்டும்
சிந்தனைகள் துளிர் விடவே
சிறப்பான செயல்கள் வேண்டும்

தமிழரெல்லாம் கூடிட வேண்டும்
தரணியெல்லாம் சேர்ந்திட வேண்டும்
தமிழர் நலம் பேணிடவே
தற்குறிகளை களைந்திட வேண்டும்

இளைத்த நம் உழவர் கூட்டம்
இன்பம் எனும் ஏற்றம் காண
இந்த நூற்றாண்டு காணப்போகும்
இனிய முதல் பொங்கல் இன்று

இறுகை கூப்பி
இயற்க்கையினை வேண்டி
இந்நாளே வைத்திடுவோம்
ஏற்றமிகு பொங்கல் இன்று

சாதி மத பேத மகன்று
சமுதாய ஏற்றம் கண்டு
சமத்துவமாய் உள்ளமெங்கும்
பொங்கட்டும் பொங்கலின்று

மடமைத்தனம் அழிந்து
மக்கள் எலாம் கூடி நின்று
முற்போக்குச் சிந்தனையோடு
பொங்கட்டும் பொங்கலின்று

உலகத்தோர்க்கு உணவளிக்கும்
உழவர்களின் உள்ளம் பொங்க
உழைத்திடும் வர்க்கமெலாம் உயர்ந்திட எண்ணம் கொண்டு
பொங்கிடுவோம் பொங்கலின்று

உலகெலாம் வாழ்ந்திடும் நம் தமிழர்
உணர்வெலாம் ஒன்றாய்ப் பொங்க
உலகத் தமிழரிடையே ஒற்றுமை பொங்கும் வண்ணம்
பொங்கட்டும் பொங்கல் இன்று

தரணியெல்லாம் தமிழ் மணக்க
தமிழர் தம் பெருமை சிறக்க
தைத் திங்கள் முதல் நாளில்
பொங்கிடுவோம் பொங்கல் இன்று.

தீவு வாழ் தமிழர் அனைவருக்கும் எமது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
நன்றி.