Thursday, April 12, 2012

தமிழர் சங்கமதில் சித்திரை விழா 2012 அன்று கவியரங்கமதில் வாசித்த கவிதை இது.

தமிழர் சங்க கலையரங்கில்
தமிழர் திருநாளாமதனில் 
அந்தமானின் கவிச்சக்கரவர்த்தி நடுவிறுக்க 
கவிஞர்கள் பலரும் அவரைச் சூழ்ந்திருக்க
சாட்ச்சியாய் தமிழறிஞர் பலர் முன்னிருக்க
அடியேனும் வந்தேன் அரங்கமதில் தமிழ் மணக்க
பலரும் கூடுகிறார் இந்நாளில் பலவும் தேடுகிறார் இன் நன்நாளில் நினைவலைகள் பலவோடு நான் மட்டும் நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன் நிதர்சனத்தை
எனது கவிதையின் தலைப்பு:
நினைத்துப் பார்க்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழனிவன்
வடக்கிறுந்து வந்தவளை பூசிப்பவன்
ஆண்டு தோறும் உதிக்கும் சித்திரையே
தமிழாண்டில் நீ பதிக்கும் முத்திரையே
தமிழர்களின் பால் நீ உதிக்கையிலே
உன்னைப் பல்லாண்டு துதி பாடி வணங்கினரே !
காக்கும் கரமென்றுனை நினைத்தோம்
ஆனால் எமை காட்டிக் கொடுத்திட்டவளென்று பின் உணர்ந்தோம்
பிற மொழியின் பெயர் தாங்கி பிறந்ததினால்
எம் பிறப்பின் சரித்திரத்தை நீ அறியாய்
விரோதியாம் ஆண்டிலே எங்கள் வேரறுத்தாய்
அது முதலாய் எம்மவரை புறக்கணித்தாய்
உன் கறை படிந்த கரம் தனை நீ கழுவப் பார்க்கிறாய்
எம்மிடமிருந்து நீ நழுவப் பார்க்கிறாய்
தனை மறந்தாலும் தமிழன் இதனை மறவான்
மே பதினேழு முள்ளிவாய்க்கால் கொடுமைதனை எவன் மறப்பான்
நீ சாட்சியோ அல்ல சண்டாளர்களின் சூழ்ச்சியோ
நான் அறியேன் என்னவிலை கொடுத்திடினும்
இதற்கு ஈடு இனி எதுவுமில்லை
மானத்தோடு வாழ்ந்திட்ட மறத்தமிழர் கூட்டம்
தன் மானம்காக்க வழியில்லையே
உலகெலாம் உவந்து உணவளித்தவன் பரம்பரைக்கு
இன்று உவக்க ஒரு வாய் உணவில்லையே
அய்யகோ என்ன செய்வேன்
குற்றமென்ன என் குற்றமென்ன தாயே
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழைப்போற்றியதால் குற்றமா
தமிழானாய் வாழ்ந்தது தான் குற்றமா
தமிழைப் பேசியதால் குற்றமா
எனது குற்றம் என்னவென்று நான் அறியுமுன்னே
எந்தமிழர் வெந்தீயில் சூழ்ந்ததென்ன கொடுமை
நடத்திட்டாய் உமது சூழ்ச்சியாலே எம்மவரை
கொன்று குவித்திட்டாய் இனி எமக்கு
ஆண்டும் புதிதல்ல மாதமும் புதிதல்ல
தமிழரைப் பழிதீர்த்த நாளும் இனிநமதல்ல !
நடந்ததெதுவும் கதையுமல்ல
நடப்பதெதுவும் முறையுமல்ல
நித்தம் செத்துப் பிழைப்பவனுக்கு
இனி சித்திரையோ நித்திரையோ எதுவுமில்லை
பழியோடு பிறந்திடும் நந்தனமே
உன் முன்னோர் இழைத்திட்ட பழி தீர்க்க
நீயாவது பாடுபடு
தமிழர் துதி பாடும் சித்திரையே
உன் நித்திரை கலைந்தெம்மை வாழவிடு
எத்துனை தான் மருந்துகள் இட்டினும்
காயத்தின் வடுக்கள் என்றும் அழிவதில்லை
எந்தமிழர் இன்புற்று வாழ்ந்திடவே
நீ ஏதாவது செய்திட நினைந்திட்டால்
இனி தமிழ் தேசம் தனக்கென்று முழங்கிடவே
வழி வகை ஏதேனும் செய்திடுவாய் தமிழாண்டே
! இனி வழிவகை ஏதேனும் செய்திடுவாய் நல்லாண்டே !!

No comments:

Post a Comment