Sunday, January 22, 2012

படிப்பவர் பயனுர

பிரார்த்தனை

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம்,
தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம்,
இன்னுயிர்ச் சாலம் எல்லாம் இறைவனின் உருஎன்(று) ஓர்தல்,
நின்னடி த்யான யோகம் நிதமெனக்(கு) அருள்வாயே.

மனதினை உன்னில் ஊன்றி, வாழ்வு தாழ்வுற்ற போதும்,
மனநிலை சாய்ந்திடாமல், வாய்த்ததில் திருப்தியுற்று,
வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்றுமின்றி,
இனிது வாழ்ந் திட எனக்குன் இன்னருள் செய்குவாயே.

எப்பணி செய்யும் போதும், எவ்வுண வுண்ணும் போதும்,
தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும்
அப்பனே அவற்றை யெல்லாம் அன்புடன் உன் தாளினையில்
அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே.

உன்னை எக்காலும் என்றன் உளமதில் எண்ணி நின்றுன்
பொன்னடிச் சரோருகத்தைப் போற்றி நமஸ்கரித்துன்
இன்னருட் கடலில் மூழ்கி, எவற்றினும் உன்னைக் கண்டு
தன்னிய னாகி வாழத் தமியனுக்(கு) அருள் செய்வாயே.

விருப்பமும் வெறுப்பும் இன்றி வினைப்பயன் எல்லாம் உன்றன்
திருப்பதம் தன்னில் சேர்த்துத் திருப்பதியும் திறனு முற்று
ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment