Tuesday, January 17, 2012

வானொலி நிலையத்தில் பொங்கல் 2012 நிகழ்ச்சிக்காக வாசித்த கவிதை

"பொங்கிடுவோம் பொங்கலின்று"

கவிஞர் கூடும் சபைதனிலே
காலம் கொடுத்திட்ட கட்டாயத்தால்
சிந்தனை சிக்கெடுத்து
சீர்வாரி பூதொடுத்து
தமிழர் நலம் பேணுதற்கு
வைக்கின்றேன் பா சபைக்கு !

எளியவனின் எண்ணங்களுக்கு
ஏற்றமிகு செவிமடுத்து
கேட்டிடுவீர் பெரியோரே
இதுவும் ஒரு பா தானே !

தமிழ் மண்ணில் பல கவிகள்
பாரதி முதல் தாசன் வரை
பார் அதில் எளியவனும்
கவிபுனைந்தேன் அதிசயமே !

தமிழோசை முழங்கச்செய்வதில்
வானொலிக்கு முதலிடமாம்
வான் தந்திட்ட ஒலிக்காக
புனைய வந்தோம் பாவும் நாமே !

என்னுடன் பாடவந்த பாவலர்களுடனே
செவிமடுக்கும் எந் தமிழர் செழிப்புற்று வாழ்ந்திடவே
தைத் திருநாள் தனிலே வாழ்த்துகின்றேன்
பாதனிலே !

புது வருடமும் பிறந்ததுவே
போகியும் கழிந்ததுவே
பழையன கழிந்து புதியன புகுந்து
பொங்கல் தினமும் வந்ததுவே

தைத் திங்கள் முதல் நாளே
தமிழருக்குத் திருநாளாம்
திருநாள் வரும் முதல் நாளில்
சிந்தனைகள்சில சிறகடிக்குதே !

போராடும் குணமே நமக்கென்பர்
போராட்டமே வாழ்க்கையுமென்பர்
போராட்டக் களத்தின் நடுவினிலே
போட்டுக் கொடுத்தவனும் தமிழரென்பர்

காக்கைக்கும் தம் குஞ்சு பொன்குஞ் சாம்
எலிவலையானாலும் தனிவலை யாம்
எலிக்கெல்லாம் வலையுண்டு புவியினிலே
எம்மவர்க்கு எங்குண்டு தெரியிலியே

கல்தோன்றி மண்தோண்றா காலத்தே
வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்பர்
எங்கு என்று எவர் அறிவர் ?
எங்கும் அவர் என்றே கூறுவர்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும்
பிறந்த நாள் பின் இறக்கும்
இறந்த நாட்களை நினைவு கூர்ந்து
இடைவிடாது உழைத்திடுவோம்

உழைக்கும் வர்க்கம் உயர்ந்திடல் வேண்டும்
உன்னதமான சிந்தனை வேண்டும்
சிந்தனைகள் துளிர் விடவே
சிறப்பான செயல்கள் வேண்டும்

தமிழரெல்லாம் கூடிட வேண்டும்
தரணியெல்லாம் சேர்ந்திட வேண்டும்
தமிழர் நலம் பேணிடவே
தற்குறிகளை களைந்திட வேண்டும்

இளைத்த நம் உழவர் கூட்டம்
இன்பம் எனும் ஏற்றம் காண
இந்த நூற்றாண்டு காணப்போகும்
இனிய முதல் பொங்கல் இன்று

இறுகை கூப்பி
இயற்க்கையினை வேண்டி
இந்நாளே வைத்திடுவோம்
ஏற்றமிகு பொங்கல் இன்று

சாதி மத பேத மகன்று
சமுதாய ஏற்றம் கண்டு
சமத்துவமாய் உள்ளமெங்கும்
பொங்கட்டும் பொங்கலின்று

மடமைத்தனம் அழிந்து
மக்கள் எலாம் கூடி நின்று
முற்போக்குச் சிந்தனையோடு
பொங்கட்டும் பொங்கலின்று

உலகத்தோர்க்கு உணவளிக்கும்
உழவர்களின் உள்ளம் பொங்க
உழைத்திடும் வர்க்கமெலாம் உயர்ந்திட எண்ணம் கொண்டு
பொங்கிடுவோம் பொங்கலின்று

உலகெலாம் வாழ்ந்திடும் நம் தமிழர்
உணர்வெலாம் ஒன்றாய்ப் பொங்க
உலகத் தமிழரிடையே ஒற்றுமை பொங்கும் வண்ணம்
பொங்கட்டும் பொங்கல் இன்று

தரணியெல்லாம் தமிழ் மணக்க
தமிழர் தம் பெருமை சிறக்க
தைத் திங்கள் முதல் நாளில்
பொங்கிடுவோம் பொங்கல் இன்று.

தீவு வாழ் தமிழர் அனைவருக்கும் எமது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
நன்றி.

No comments:

Post a Comment