Sunday, January 29, 2012

குடியரசு தினம்

இந்தியப் பேரரசின் 63வது குடியரசு தினம்
கோலாகலமான கொண்டாட்டம்
வரலாறு காணாத பாதுகாப்புடன்
புதுதில்லி திகழ்கிறது (ப)புதுமையாய்
குண்டு துளைக்காத ஊர்தியில்
காவலர்களின் அணிவகுப்புகளோடு
பவனிவருகிறார் பாரதத்தின் குடியரசுத் தலைவர்
இத் தேசமதில் ஏனோஇன்னும்
ஒழியவில்லை பட்டினிச்சாவு
பஞ்சாபில் பயங்கரவாதம்
வங்கத்திலோ நக்சல் தீவிரவாதம்
ஆந்திராவில் தெழுங்கானா கோரிக்கை
காஷ்மீரிலோ தீவிரவாதி ஊடுருவல் - இட
ஒதுக்கீட்டுப் பட்டியலில் உரிமை கோரி
உ.பி மற்றும் ம.பி யில் போராட்டம்
தமிழகத்தில் தண்ணீர் இல்லை
இருக்கும் கேரளமோ தர மறுக்கிறது
கருநாடகத்திலோ சகோதர ஊழல் என்றால்
தலைநகரிலோ விளையாட்டுத் துறையில்
தாயகத்தினை காக்கும் பொருப்பிலிருக்கும்
பெரியவரின் பிறந்த நாள் கணக்கிலே பிழை
எல்லையோர கடல் பகுதியில் - என்றென்றும்
மீளாத் துயரம் மீனவர்களின் வாழ்வில்
எரிகிற வீட்டில் பிடுங்கியமட்டும் லாபம்
என்பதைப் போல்
எது எப்படி இருந்தாலும் ஊழல் மட்டும்
ஒழியவில்லை இன்னும் நம் தேசத்தில்
நாள்தோறும் கொலை நாடுதோறும் கொள்ளை
தெருவெங்கும் முழக்கம் - தேசம்
முழுதும் கலக்கம்
அரசியல் ஆதாயத்தில்
இன்னும் அரைகுறை வியாபாரிகள்
நம் தேசத்தினை ஆள
இன்னும் எத்தனை நாள்
அறிக்கைகளும் அறிவிப்புகளும்
இலவசமாய்
அனைவருக்கும் பொதுவான கல்வி
தேச நதிநீர்த்திட்டம்
படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு
இவை போன்ற இன்னும் பல
பேசுவது பெருமையாய்தான் இருக்கிறது
இன்னும் எத்தனை வருடங்கள்
என்றுதான் புரியவில்லை
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவனை தூக்கி நடுவில் வை
என்பதனைப் போல்
நாமும் கொண்டாடுகிறோம்
குடியரசு நாளிதனை.

Tuesday, January 24, 2012

திருமண வாழ்த்து

அறுகு போல் வேரோடி
ஆல் போல் தழைத்து
இன் தமிழ்ச்சுவைபோல் இயைந்து
ஈகை பல புரிந்து
உற்ற தமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த யாக்கை பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய் உறவாடி
ஓங்கார ஒலியெழுப்பி
ஒளடதங்கள் நீங்க
ஃதோடு வாழ்வாங்கு வாழியவே.

Sunday, January 22, 2012

படிப்பவர் பயனுர

பிரார்த்தனை

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம்,
தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம்,
இன்னுயிர்ச் சாலம் எல்லாம் இறைவனின் உருஎன்(று) ஓர்தல்,
நின்னடி த்யான யோகம் நிதமெனக்(கு) அருள்வாயே.

மனதினை உன்னில் ஊன்றி, வாழ்வு தாழ்வுற்ற போதும்,
மனநிலை சாய்ந்திடாமல், வாய்த்ததில் திருப்தியுற்று,
வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்றுமின்றி,
இனிது வாழ்ந் திட எனக்குன் இன்னருள் செய்குவாயே.

எப்பணி செய்யும் போதும், எவ்வுண வுண்ணும் போதும்,
தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும்
அப்பனே அவற்றை யெல்லாம் அன்புடன் உன் தாளினையில்
அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே.

உன்னை எக்காலும் என்றன் உளமதில் எண்ணி நின்றுன்
பொன்னடிச் சரோருகத்தைப் போற்றி நமஸ்கரித்துன்
இன்னருட் கடலில் மூழ்கி, எவற்றினும் உன்னைக் கண்டு
தன்னிய னாகி வாழத் தமியனுக்(கு) அருள் செய்வாயே.

விருப்பமும் வெறுப்பும் இன்றி வினைப்பயன் எல்லாம் உன்றன்
திருப்பதம் தன்னில் சேர்த்துத் திருப்பதியும் திறனு முற்று
ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே.

திருச்சிற்றம்பலம்.

Tuesday, January 17, 2012

வானொலி நிலையத்தில் பொங்கல் 2012 நிகழ்ச்சிக்காக வாசித்த கவிதை

"பொங்கிடுவோம் பொங்கலின்று"

கவிஞர் கூடும் சபைதனிலே
காலம் கொடுத்திட்ட கட்டாயத்தால்
சிந்தனை சிக்கெடுத்து
சீர்வாரி பூதொடுத்து
தமிழர் நலம் பேணுதற்கு
வைக்கின்றேன் பா சபைக்கு !

எளியவனின் எண்ணங்களுக்கு
ஏற்றமிகு செவிமடுத்து
கேட்டிடுவீர் பெரியோரே
இதுவும் ஒரு பா தானே !

தமிழ் மண்ணில் பல கவிகள்
பாரதி முதல் தாசன் வரை
பார் அதில் எளியவனும்
கவிபுனைந்தேன் அதிசயமே !

தமிழோசை முழங்கச்செய்வதில்
வானொலிக்கு முதலிடமாம்
வான் தந்திட்ட ஒலிக்காக
புனைய வந்தோம் பாவும் நாமே !

என்னுடன் பாடவந்த பாவலர்களுடனே
செவிமடுக்கும் எந் தமிழர் செழிப்புற்று வாழ்ந்திடவே
தைத் திருநாள் தனிலே வாழ்த்துகின்றேன்
பாதனிலே !

புது வருடமும் பிறந்ததுவே
போகியும் கழிந்ததுவே
பழையன கழிந்து புதியன புகுந்து
பொங்கல் தினமும் வந்ததுவே

தைத் திங்கள் முதல் நாளே
தமிழருக்குத் திருநாளாம்
திருநாள் வரும் முதல் நாளில்
சிந்தனைகள்சில சிறகடிக்குதே !

போராடும் குணமே நமக்கென்பர்
போராட்டமே வாழ்க்கையுமென்பர்
போராட்டக் களத்தின் நடுவினிலே
போட்டுக் கொடுத்தவனும் தமிழரென்பர்

காக்கைக்கும் தம் குஞ்சு பொன்குஞ் சாம்
எலிவலையானாலும் தனிவலை யாம்
எலிக்கெல்லாம் வலையுண்டு புவியினிலே
எம்மவர்க்கு எங்குண்டு தெரியிலியே

கல்தோன்றி மண்தோண்றா காலத்தே
வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்பர்
எங்கு என்று எவர் அறிவர் ?
எங்கும் அவர் என்றே கூறுவர்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும்
பிறந்த நாள் பின் இறக்கும்
இறந்த நாட்களை நினைவு கூர்ந்து
இடைவிடாது உழைத்திடுவோம்

உழைக்கும் வர்க்கம் உயர்ந்திடல் வேண்டும்
உன்னதமான சிந்தனை வேண்டும்
சிந்தனைகள் துளிர் விடவே
சிறப்பான செயல்கள் வேண்டும்

தமிழரெல்லாம் கூடிட வேண்டும்
தரணியெல்லாம் சேர்ந்திட வேண்டும்
தமிழர் நலம் பேணிடவே
தற்குறிகளை களைந்திட வேண்டும்

இளைத்த நம் உழவர் கூட்டம்
இன்பம் எனும் ஏற்றம் காண
இந்த நூற்றாண்டு காணப்போகும்
இனிய முதல் பொங்கல் இன்று

இறுகை கூப்பி
இயற்க்கையினை வேண்டி
இந்நாளே வைத்திடுவோம்
ஏற்றமிகு பொங்கல் இன்று

சாதி மத பேத மகன்று
சமுதாய ஏற்றம் கண்டு
சமத்துவமாய் உள்ளமெங்கும்
பொங்கட்டும் பொங்கலின்று

மடமைத்தனம் அழிந்து
மக்கள் எலாம் கூடி நின்று
முற்போக்குச் சிந்தனையோடு
பொங்கட்டும் பொங்கலின்று

உலகத்தோர்க்கு உணவளிக்கும்
உழவர்களின் உள்ளம் பொங்க
உழைத்திடும் வர்க்கமெலாம் உயர்ந்திட எண்ணம் கொண்டு
பொங்கிடுவோம் பொங்கலின்று

உலகெலாம் வாழ்ந்திடும் நம் தமிழர்
உணர்வெலாம் ஒன்றாய்ப் பொங்க
உலகத் தமிழரிடையே ஒற்றுமை பொங்கும் வண்ணம்
பொங்கட்டும் பொங்கல் இன்று

தரணியெல்லாம் தமிழ் மணக்க
தமிழர் தம் பெருமை சிறக்க
தைத் திங்கள் முதல் நாளில்
பொங்கிடுவோம் பொங்கல் இன்று.

தீவு வாழ் தமிழர் அனைவருக்கும் எமது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
நன்றி.