Sunday, April 15, 2012

சிவம் அனைவருக்கும் சமம் (சிவலிங்கம் ஒரு பார்வை)

இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல). தமிழில் - இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன. இதனுடைய விளக்கம் இலக்கு = குறிக்கோள், இலங்குதல் = ஒளிர்தல், விளங்குதல் என்பதாக அமைகிறது. இலிங்கம் - ஆன்மா வாகிய உயிர் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் சின்னமாக உள்ளது எனலாம். இலிங்கம் என்றால் உயிர், அணு. ஒன்றரை இலட்சம் அணுக்கள் சேர்ந்ததுதான் ஒரு மனித உயிர். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம். இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு. இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு. இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம். இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள். இலிங்கம் எனும் சொல் வடமொழியிலிருந்து வந்தது என்பதை ஏற்றுக்கொள்ளளாகாது. கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது எனலாம் இதனயே சேக்கிழார் பெருமான்: “காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”. என்கிறார் பரம்பொருளான சிவ பெருமான் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது. இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா சீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருட்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விட்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது. இலிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விட்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை நாம் உணரலாம். இந்தப் பிரமாண்டமே இலிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது. இதனையே அன்பே சிவம் என்கிறார் திருமூலர், “அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே” இப்பாடலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியதொன்றிருக்கிறது ……. திருமூலர் அன்பு என்று எதனைக் குறிப்பிடுகிறார் ,நாம் அனைவரும் இவ் அன்பானது ஒருவர் பிறர் மீது செலுத்தும் அன்பு என்று தான் நினைத்திருக்கிறோம் அல்லவா ஆனால் இப் பாடலை ஊன்றிக் கவனித்தால் அதனுடைய பொருள் விளங்க்கும் …….இது நாம் அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு அல்ல……. நமது உடம்பில் எங்கு அன்பு உருவாகிறதோ அல்லது எங்கு நிலை கொள்கிறதோ அதை தான் திருமூலர் சிவம் என்று சொல்கிறார். இதைதான் வள்ளல் பெருமானும் ஆன்ம நேய வழிபாடு என்று சொல்கிறார். சரி உடம்பில் அன்பு உருவாகும் இடம் எது? இதனை நாம் நங்கு கவனிப்போமேயானால் நம்மில் சில நண்பர்கள், அல்லது சில யோகிகள் எப்பொழுதும் சினம் கொள்ளமால் அமைதியாகவும் அன்புடனுமே இருப்பார்கள். நீங்கள் எவ்வாறு இப்படி சினம் அடையாமல் இருகிறிர்கள் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அவர் உடன் இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள் ‘அவர் சிறு வயது முதலே இப்படிதான் அன்பாக இருப்பார்’ கோபம் கொள்ளமாட்டார் என்று. சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று “அதெல்லாம் பிறப்பிலே அமையவேண்டும் அல்லது யோகத்தினால் அமையவேண்டும்” என்று சொல்வார்கள். அது என்ன பிறப்பிலே அமைவது? அது வேறொன்றுமில்லை….. உயிரிலே அமைய வேண்டும் என்பதைத்தான் புரியாமல் சொல்கிறார்கள். ஆம் நம் உயிர் தன்மை எந்த அளவு அன்பு மயமாக இருக்கிறதோ அந்த அளவு நாமும் மற்ற உயிர்களிடம் அன்பாக இருக்க முடியும். அது என்ன உயிர் தன்மை? நம் உயிரின் தன்மைதான். அதை எவ்வாறு அடைவது? நாம் செய்யும் தவம் நம் உயிர் தன்மையை தொட வேண்டும். அவ்வாறு உயிர் தன்மையை தொட்டு தவம் செய்தோமேயானால் அப்பொழுது உள்ளூர ஒன்று நடந்தேறும். அது என்ன? அதைத்தான் வள்ளல் பெருமான் சொல்கிறார், “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து - அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரச என்னுரிமை நாயகனே என்ற வனைந்து வனைந்து ஏத்ததும நாம் வம்மின் உலகியலீர மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” அது என்ன நம் உயிர் தன்மையை தொட்டு செய்யும் தவம் , நம் உயிர் எங்கு இருக்கிறது அதை அடையும் வழியை எவ்வாறு அடைவது என்று தெரிந்து தவம் செய்வதே ஆகும். அன்பே சிவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்பு நம் உடலில் எந்த விடயத்துடன் சேர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆம் அது உயிருடன் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பெனும் வடிவத்தில் சிவமாய் நிற்கிறது. இதை ஞானிகள் உணர்ந்ததால்தான். இயேசு ‘அயலானையும் நேசி’ என்றார். வள்ளல் பெருமான் சீவ காருன்யமே (கொலை தவிர்த்தலே) கடவுளை அடையும் வழி என்கிறார். உயிர் எங்கு இருக்கிறது? உயிர் பற்றி திருமூலர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று பாப்போம்? இந்த பாடலில் திருமூலர் உயிர் பற்றி மட்டும் சொல்லவில்லை. சிவலிங்கம் என்பது என்ன என்பதை பற்றியும் சொல்கிறார், இதன் மூலம் காலம் காலமாக சிவலிங்கம் பற்றிய சிலரது தவறான கண்ணோட்டத்தை சம்மட்டியால் அடித்து எறிகிறார் (Some people used to say it’s sexual organ…….but it’s not true). அந்த பாடல் “உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே” நாம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தான் கையெடுத்து கும்பிடுகிறோம். இந்த பாடலின் முதல் வரியிலே திருமூலர் ஐயா… சொல்லிவிட்டார் ஊனுடம்பு ஆலயம் என்று…நம் உடம்புதான் ஆலயம் என்று சொல்லி விட்டார், பின் சிவலிங்கம் மட்டும் என்ன ஆலயத்திற்கு வெளியிலா இருக்கும்? ஒரு படி மேலே சென்று “சீவன் சிவலிங்கம்” என்றும் சொல்லி விட்டார், இப்பொழுது ஒன்றை உணரவேண்டும் ஏன் நாம் செய்யும் தவம் நமது உயிர்த் தன்மையை தொட வேண்டும் என்று, நாம் கையெடுத்து கும்பிட வேண்டிய சிவலிங்கம் புறத்தில் உள்ள ஆலயத்தில் மட்டும் இல்லை, ஊனுடம்பாகிய நம் உடம்பினுல்லும் இருக்கிறார், இதைதான் “உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனை தேடு” -என்று அவ்வை பிராட்டியும் சொல்கிறார், “திடம்பட ஈசனை தேடு” –அவ்வையார் சொல்லி விட்டார். எங்கு போய் தேடுவது? உடம்பினுள் இருக்கார் என்று திருமூலரும் மற்றும் அவ்வையாரும் சொல்லி விட்டார்கள் இன்னும் வேறு ஏதாவது நெருங்கி சொல்லி இருகிறார்களா? என்றால் திருமூலர் இன்னும் அருகில் சொல்கிறார் “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று ஒரு பாடலில் சொல்கிறார் இதன் மூலம் சிவம் என்னும் சீவனாகிய உயிர் தலையில் தான் அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார். ஆம், சிவம் என்றால் ஒளி என்றே பொருள்படும். சிவம் என்பது தனிப்பட்ட சாதிக்கோ, சமயத்திற்கோ உரியவர் அல்ல, இவர் எல்லா மனிதர்களிடமும் உள்ளார் என்பதை ‘வள்ளல் பெருமான்’மிக தீர்க்கமாக நம்பியதால்தான் இப்படி பாடினார்:- “சாதியும் மதமும் சமயமும் பொய் எனஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி” சிவம் இனம், மதம், மொழி எல்லாம் கடந்து எல்லோருடைய தலை பகுதியில் இருக்கிறார் என்பதாகும். ஆம், “தேவன் ஒளியாய் இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்” – இயேசு கிறித்து அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா ஞானிகளும் கடவுள் ஒளியாக இருக்கிறார் என்றே சொன்னார்கள். அபபடி எனில் கடவுளை அடையும் வழியும் ஒன்றாகவே இருக்கும். அதாவது எல்லா ஞானிகளும் இறைவனை அடைய செய்த முயற்ச்சியும் ஒன்றாகவே இருக்கும். அன்பே உருவாக சிவத்தை நினைந்திடுவோம். அன்புடன் பி.செண்பகராஜா.

Thursday, April 12, 2012

தமிழர் சங்கமதில் சித்திரை விழா 2012 அன்று கவியரங்கமதில் வாசித்த கவிதை இது.

தமிழர் சங்க கலையரங்கில்
தமிழர் திருநாளாமதனில் 
அந்தமானின் கவிச்சக்கரவர்த்தி நடுவிறுக்க 
கவிஞர்கள் பலரும் அவரைச் சூழ்ந்திருக்க
சாட்ச்சியாய் தமிழறிஞர் பலர் முன்னிருக்க
அடியேனும் வந்தேன் அரங்கமதில் தமிழ் மணக்க
பலரும் கூடுகிறார் இந்நாளில் பலவும் தேடுகிறார் இன் நன்நாளில் நினைவலைகள் பலவோடு நான் மட்டும் நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன் நிதர்சனத்தை
எனது கவிதையின் தலைப்பு:
நினைத்துப் பார்க்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழனிவன்
வடக்கிறுந்து வந்தவளை பூசிப்பவன்
ஆண்டு தோறும் உதிக்கும் சித்திரையே
தமிழாண்டில் நீ பதிக்கும் முத்திரையே
தமிழர்களின் பால் நீ உதிக்கையிலே
உன்னைப் பல்லாண்டு துதி பாடி வணங்கினரே !
காக்கும் கரமென்றுனை நினைத்தோம்
ஆனால் எமை காட்டிக் கொடுத்திட்டவளென்று பின் உணர்ந்தோம்
பிற மொழியின் பெயர் தாங்கி பிறந்ததினால்
எம் பிறப்பின் சரித்திரத்தை நீ அறியாய்
விரோதியாம் ஆண்டிலே எங்கள் வேரறுத்தாய்
அது முதலாய் எம்மவரை புறக்கணித்தாய்
உன் கறை படிந்த கரம் தனை நீ கழுவப் பார்க்கிறாய்
எம்மிடமிருந்து நீ நழுவப் பார்க்கிறாய்
தனை மறந்தாலும் தமிழன் இதனை மறவான்
மே பதினேழு முள்ளிவாய்க்கால் கொடுமைதனை எவன் மறப்பான்
நீ சாட்சியோ அல்ல சண்டாளர்களின் சூழ்ச்சியோ
நான் அறியேன் என்னவிலை கொடுத்திடினும்
இதற்கு ஈடு இனி எதுவுமில்லை
மானத்தோடு வாழ்ந்திட்ட மறத்தமிழர் கூட்டம்
தன் மானம்காக்க வழியில்லையே
உலகெலாம் உவந்து உணவளித்தவன் பரம்பரைக்கு
இன்று உவக்க ஒரு வாய் உணவில்லையே
அய்யகோ என்ன செய்வேன்
குற்றமென்ன என் குற்றமென்ன தாயே
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழைப்போற்றியதால் குற்றமா
தமிழானாய் வாழ்ந்தது தான் குற்றமா
தமிழைப் பேசியதால் குற்றமா
எனது குற்றம் என்னவென்று நான் அறியுமுன்னே
எந்தமிழர் வெந்தீயில் சூழ்ந்ததென்ன கொடுமை
நடத்திட்டாய் உமது சூழ்ச்சியாலே எம்மவரை
கொன்று குவித்திட்டாய் இனி எமக்கு
ஆண்டும் புதிதல்ல மாதமும் புதிதல்ல
தமிழரைப் பழிதீர்த்த நாளும் இனிநமதல்ல !
நடந்ததெதுவும் கதையுமல்ல
நடப்பதெதுவும் முறையுமல்ல
நித்தம் செத்துப் பிழைப்பவனுக்கு
இனி சித்திரையோ நித்திரையோ எதுவுமில்லை
பழியோடு பிறந்திடும் நந்தனமே
உன் முன்னோர் இழைத்திட்ட பழி தீர்க்க
நீயாவது பாடுபடு
தமிழர் துதி பாடும் சித்திரையே
உன் நித்திரை கலைந்தெம்மை வாழவிடு
எத்துனை தான் மருந்துகள் இட்டினும்
காயத்தின் வடுக்கள் என்றும் அழிவதில்லை
எந்தமிழர் இன்புற்று வாழ்ந்திடவே
நீ ஏதாவது செய்திட நினைந்திட்டால்
இனி தமிழ் தேசம் தனக்கென்று முழங்கிடவே
வழி வகை ஏதேனும் செய்திடுவாய் தமிழாண்டே
! இனி வழிவகை ஏதேனும் செய்திடுவாய் நல்லாண்டே !!