Monday, February 21, 2011

தமிழா தமிழா

தமிழா தமிழா நீ பேசுவது தமிழா!

ஒரே மொழிதனைப் பேசிடும் நம்
உணர்வுகள் ஒன்றிப் பிறவாதது ஏன் ?
ஒரே மொழி உணர்த்திடும் உணர்வை
உணர்ந்தும் உணராதிருப்பது ஏன் ?

உலகம் முழுதும் இருக்கின்றோம்
உணர்வுஅற்று கிடக்கின்றோம்
உண்டு உறங்கி கழித்ததைவிட
குல உயர்வுக்காய் என்ன செய்திட்டோம் ?

அன்றய சரித்திரப் பெறுமைகளால்
தமிழனாய் பிறந்து தலைநிமிர்ந்தோம்
இன்று வாழும் தமிழர்களை
நாளைய சரித்திரம் பழித்திடுமே !

சரித்திரம் சாத்திரம் விட்டுவிடு
நம் சந்ததி இனி பழிக்காதிருந்துவிடு
நம்மில் ஒருவனாய் நம் இனத்தோன்
இனிமேலும் அழியாது காத்துவிடு !

உலகை ஆண்ட தமிழினமே
உலக வரைபடத்தில் உன் இடம்
எதுவென்று காட்டு - உன்
மூதாதையர் பாட்டன் வாழ்ந்த,
சரித்திரத்தையாவது நிலைநாட்டு !

உலக மக்கள் உய்வதற்கு
உன்னதமாக பாடுபட்டாய்
உன்மக்கள் உயிர்காக்க
உத்தமனே நீ ஏன் மறந்தாய் ?

கண் இருந்தும் குருடனாக
காதிருந்தும் செவிடனாக
வாய் இருந்தும் ஊமையாக
இருந்தது போதும் எழுந்துவிடு
இனிமேலாவது ஒன்றாய்க் குரல் கொடு!

மகிழ்ச்சியில் திளைத்திடும் மனிதர்காள்
தம் மாந்தர் நிலைதம் அறிவீரோ ?
உதித்த செங்கதிர் வீழ்ந்ததென்று
உணர்வு பொங்கித் திரிகிரீரோ ?
வீழ்ந்த செங்கதிர் மறைந்தான் என்று
மனமகிழ்ச்சியில் திரியாதீர்
மறைந்த கதிரவன் மீண்டு எழுவான்
என்பதறியா திழைக்கின்றீர் - இனி
எழும் செங்கதிர் வெறும் எழுச்சிக்கல்ல
சரித்திரம் செய்திட்ட தவறுகளை - இனி
சரிசெய்திடவே என்பதுகாண்.
***